காதலில்
புது கவிதையாய் இருந்தவள்
கல்யாணத்தில்
மரபு கவிதையாகிவிட்டேன்
என்கிறாய்
இரண்டையும் எழுதியவன்
நீதானே
அதற்குத்தான்
அன்றே சொன்னேன்
புது கவிதை
யார் வேண்டுமானாலும் எழுதலாம்
மரபு கவிதை இலக்கணம்
அறிந்தவர்களுக்கு மட்டும்
நீதான் எழுதினாய்
ஒரு வரி கவிதை ..
இரு கால் பூ …
உலா வரும் பூந்த்தொட்டி …
உன் பெயரை சூட்டும் வரை
அதனை நிலா என்று அழைப்பதில்லை …
இப்படி பல …
நீ கவிஞனானால்
நான் கவிதையாக வேண்டும்
நீ கணவனானால்
நான் காப்பி கலக்கவேண்டும்
நீ சிற்பியானால்
நான் சிலையாக வேண்டும்
இப்படி எல்லாமுமாக
நான் ஆக வேண்டும்
உன் விருப்பபடி
இங்கே எது நடக்கும்
என் விருப்பபடி
நானே நடக்காதபோது