போறாளே போறாளே ………

நான் எழுதி இசை கோர்ப்பு செய்த‌ பாட‌ல்க‌ள் இங்கு இட‌ம் பெறும் ……….

போறாளே போறாளே ………

போறாளே போறாளே ………

போறாளே போறாளே என்னை விட்டு போறாளே
க‌ண்ணில் காத‌ல் தீயை மூட்டி போறாளே
அவ‌ள் விண்ணோடு மின்ன‌லா பூவோடு தென்ற‌லா
நெஞ்சோடு காத‌லாய் ஆடும் ஊஞ்ச‌லா
நான் கொஞ்சாத கொஞ்ச‌லா கெஞ்சாத‌ கெஞ்சலா
கொல்லாம‌ல் கொல்லுதே சின்ன‌ வெண்ணிலா

போறாளே போறாளே என்னை விட்டு போறாளே
க‌ண்ணில் காத‌ல் தீயை மூட்டி போறாளே
                (1)

ர‌த்த‌ம் ச்சொட்ட‌ ச்சொட்ட‌ என் க‌ண்ணீரெல்லாம் கொட்ட‌
தேகம் எங்கும் சுட்ட க‌ருந்தீயாய் போறாளே
காத‌ல் த‌ந்துவிட்டு என் நெஞ்சை கொன்றுவிட்டு
வ‌ட்டிக்கார‌ன்போலே எனை வாரிச்சென்றாளே
அவ‌ள் விண்ணோடு மின்ன‌லா பூவோடு தென்ற‌லா
நெஞ்சோடு காத‌லாய் ஆடும் ஊஞ்ச‌லா
நான் கொஞ்சாத கொஞ்ச‌லா கெஞ்சாத‌ கெஞ்சலா
கொல்லாம‌ல் கொல்லுதே சின்ன‌ வெண்ணிலா

              (2)
ஓரவிழி பார்வ‌ என் விலாவெல்லாம் நோக‌
நெஞ்சுகூட்டில் என்னை கிள்ளிச்சென்றாளே
போகும் பாதை பார்த்து நான் காத்திருந்தேன் நேத்து
ஆயுள் எல்லாம் சேர்த்து அவ‌ள் அள்ளிச்சென்றாளே
நான் கொஞ்சாத கொஞ்ச‌லா கெஞ்சாத‌ கெஞ்சலா
கொல்லாம‌ல் கொல்லுதே சின்ன‌ வெண்ணிலா
அவ‌ள் விண்ணோடு மின்ன‌லா பூவோடு தென்ற‌லா
நெஞ்சோடு காத‌லாய் ஆடும் ஊஞ்ச‌லா

நடுநிலைமை என்றால் என்ன? – சாருவுக்கு க‌டித‌ம் ‍ 3

http://www.charuonline.com/Feb09/Natunilamai.html

சாரு ,

ஒருவ‌ரின் விம‌ர்ச‌ன‌ம் அவ‌ருடைய‌ ர‌ச‌னை சார்ந்த‌தாக‌வே இருக்க‌ முடியும். அந்த‌ ர‌ச‌னை அவ‌ரின் விருப்ப‌ம் சார்ந்த‌தாக‌வும் , அந்த‌ விஷ‌ய‌ம் குறித்து அவ‌ரின் ஆளுமையின் ஆழ‌த்தின் அள‌வை பொறுத்த‌து என‌வே இதில் ந‌டு நில‌மை , விருப்பு வெறுப்புக‌ள‌ற்ற‌து என்ப‌து ந‌டைமுறையில் சாத்திய‌மில்லை என்ப‌து என் க‌ருத்து.

எப்ப‌டி க‌ட‌வுளுக்குப் ப‌ல‌ முக‌ங்க‌ள் உள்ள‌தாக‌ க‌ற்பிக்க‌ப்ப‌ட்டும் அறிய‌ப்ப‌ட்டும் உள்ள‌தோ அதே போல் பாலாவின் ’ நான் க‌ட‌வுள் ’ ப‌ற்றிய‌ ஒவ்வொருவ‌ரின் விம‌ர்ச‌ன‌த்திலும் அவ‌ரின் விருப்ப‌ம் சார்ந்த‌ ஒரு க‌ருத்து முக‌ம் காட்ட‌ப்ப‌டுகின்ற‌து. எனினும் உங்க‌ளின் ’ நான் க‌ட‌வுள் ’ விம‌ர்ச‌னம் ப‌டிக்க‌ ஆர்வ‌மாக‌ உள்ள‌ ப‌ல‌ரில் நானும் இருக்கிறேன் (இது என் விருப்ப‌ம் சார்ந்த‌து).

இந்தப்‌ ப‌ட‌த்தைப் ப‌ற்றி வ‌லைப்ப‌க்க‌த்தில் ப‌லர் பேசுகிறார்க‌ள். பேசுப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் காசு கொடுத்துப் ப‌ட‌ம் பார்த்தால் க‌ட‌வுளை க‌ரை சேர்த்துவிட‌லாம்.

யாழினி சுந்த‌ர்

பிப்ர‌வ‌ரி 19, 2009

***

இல்லை சுந்தர், உங்கள் கருத்தை நான் மறுக்கிறேன். நடுநிலைமை என்ற ஒன்று இருக்கிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் நாவலை நான் மிகக் கடுமையாக விமர்சித்து எழுதினேன். பிறகு, என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் பேசுமாறு ராமகிருஷ்ணனை அழைத்தேன். கூட்டத்தில் பேசிய ராமகிருஷ்ணன், நான் முன்பு உப பாண்டவத்தை விமர்சித்ததை மனதில் வைத்துக் கொண்டு என்னைப் பதிலுக்குத் திட்டவில்லை. அன்றைய விழாவில் மிக அருமையாகப் பேசியவர் அவர்தான். இதுதான் நடுநிலைமை என்பது. ஒருவர் நண்பர் என்பதற்காகப் பாராட்டுவது, அல்லது எதிரி என்பதற்காகத் திட்டுவது – இதுதான் அரசியலிலும், இலக்கியத்திலும், மற்றும் எல்லாத் துறைகளிலும் இன்றைய நடைமுறையாக உள்ளது.

சுஜாதா என்னுடைய நாவல்களை மலம் என்று திட்டினார். அது அவருடைய கருத்து. அந்தக் கருத்தைச் சொன்னதால் எனக்குள் ஏற்பட்ட கோபம் அவருடைய எழுத்தின் மீதான என்னுடைய மதிப்பீட்டைப் பாதிக்கலாகாது. அப்படி பாதித்தால் எனக்கென்று ஒரு அபிப்பிராயம் இல்லை என்றும், சுஜாதாவின் கருத்துதான் என்னுடைய அபிப்பிராயத்தையே நிர்ணயிக்கிறது என்றும் ஆகி விடுகிறது. அப்படியானால் என் மீது எனக்கே மரியாதை இல்லை என்று பொருள். சுயமரியாதை இல்லாதவர்கள் செய்யும் வேலை அது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் உத்தமத் தமிழ் எழுத்தாளர் என் நண்பர் அலெக்ஸிடம் என்னுடைய எழுத்தைப் பற்றிப் பாராட்டோ பாராட்டு என்று பாராட்டியிருக்கிறார். உடனே ரொம்பவும் உற்சாகமடைந்த அலெக்ஸ் எனக்கு போன் போட்டு அப்படியாக்கும், இப்படியாக்கும் என்றான். நான் உடனே “அவன் ஒரு அயோக்கியப் பயல்; அவன் பேசும் பேச்சுக்கு எந்த மரியாதையும் இல்லை; அவனுடைய பாராட்டைக் கொண்டு போய் குப்பைக் கூடையில் போடு ” என்றேன்.

அன்றைய தினம் மாலையில் ஒரு இலக்கியக் கூட்டம். நானும் உத்தமத் தமிழ் எழுத்தாளனும் மற்றும் பலரும் பேசுவாதாக இருந்தது. முதலில் நான் பேசினேன். (இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. யார் ஜூனியரோ அவர்தான் முதலில் பேச வேண்டும் என்பது ஒரு மரபு. உ.த.எ. வயதிலும், அனுபவத்திலும் என்னை விட பத்துப் பதினைந்து ஆண்டுகள் சிறியவர். ஆனால் கூட்டம் நடத்தியவர்கள் என்னுடைய தோற்றத்தை வைத்து உ.த.எ.வை விட நான் ரொம்ப ஜூனியர் என்று கணக்குப் போட்டு விட்டார்கள் போலும்.) மேடையில் பேசும் போது உ.த.எ.வின் சீடர் ஒருவரை வறுத்து எடுத்து விட்டேன் போலிருக்கிறது; கடைசியில் பேச வந்த உ.த.எ. “சாரு என்ன எழுதுகிறார்? மண்ணாங்கட்டி, தெருப்புழுதி ” என்ற பாணியில் வாய்க்கு வந்ததைத் திட்டினார்.

நான் அலெக்ஸைப் பார்த்தேன். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான்.

இன்னொரு சம்பவம். சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் எனக்குப் பிறகு பேச வந்த கமல்ஹாசன் “சாரு நிவேதிதா கூறியதுதான் என்னுடைய கருத்தும் ” என்று பேசி தனது உரையை ஆரம்பித்தார். இது சினேகபாவமான தொனி. இதை நான் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். இதன் பிறகு வெளிவந்த தசாவதாரத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டியிருக்க வேண்டும். இந்தியா டுடேவில் நான் எழுதிய கமல் பற்றிய கட்டுரையில் அவரை ஆஹா, ஓஹோ என்று நான் புகழ்ந்து தள்ளியிருக்க வேண்டும். செய்தேனா? தசாவதாரத்தைக் கடுமையாக விமர்சித்தேன். கமல் பற்றிய கட்டுரையில் நடுநிலைமையாக அவரைப் பற்றி ஆய்வு செய்தேன். அது கமல் பற்றிய சிறப்பு மலர். அந்த மலரில் எழுதப்பட்டிருந்த கமல் பற்றிய கட்டுரைகளிலேயே அவரை விமர்சித்து எழுதப் பட்ட ஒரே கட்டுரை அடியேனுடையதுதான். அடுத்த முறை பார்த்தால் என்னோடு பேசுவாரா, சொல்லுங்கள்?

இதற்குப் பெயர்தான் நடுநிலைமை என்பது.

ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் நட்போ, நல்லுறவோ அல்லது கோபமோ, வெறுப்போ அவருடைய படைப்பை நாம் அணுகுவதற்குத் தடையாக இருக்கலாகாது. அதுதான் நடுநிலைமை.

கனிமொழி என்னுடைய நண்பர். ஆனால் இப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை மனதில் கொண்டு ‘கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ’ என்று எழுதியிருக்கிறேன். இதனால் கனிமொழியின் மனம் புண்படும். நன்றாகத் தெரியும். ஆனால், நட்புக்காக பொய் சொல்ல முடியாது அல்லவா? அப்படியல்லாமல், நட்பு நம்முடைய விமர்சனத்துக்குக் குறுக்கே வந்தால் நீங்கள் நடுநிலை தவறுகிறீர்கள் என்று பொருள்.

உ.த. எ. ஒருமுறை சொன்னார், எதற்கு சினிமாக்காரர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று. இதனாலேயே அவருடைய சினிமா விமர்சனங்கள் முதுகு சொறிந்து விடுவது போல் ரொம்ப இதமாக இருக்கும். காரணம், எழுத்து அவருக்கு தவம் அல்ல; பிழைப்பு. (இதை மீறியும் சில சமயங்களில் அவர் நன்றாக எழுதி விடுகிறார்; எப்போது, எங்கே என்று பிறகு சொல்கிறேன்; பொறுங்கள்).

எனவே நீங்கள் சொல்வது போல் விமர்சனம் என்பது ஒருவரின் சொந்த விருப்பம் சார்ந்ததாக இருக்க முடியாது. எப்போது, எப்படி இருக்கலாம் என்றால் எனக்கு நாதஸ்வரம் பிடிக்காது; ஷெனாய் பிடிக்கும். எனக்கு அசோக மித்திரனைப் பிடிக்கவே பிடிக்காது; ஆனால் அவருடைய எழுத்து எனக்கு உயிர். ஆளையும் பிடிக்கும், எழுத்தையும் பிடிக்கும் என்றால் இந்தியாவில் குஷ்வந்த் சிங், தமிழில் நிறைய பேர் இருக்கிறார்கள்; பெரிய பட்டியலே போடலாம். ஆளையும் பிடிக்காது; அவர் எழுத்தையும் பிடிக்காது என்றால் உ.த.எ.

ஆனால் வேறோர் விஷயம் இருக்கிறது. ஷேக்ஸ்பியரின் எழுத்தில் இனவாதம் உள்ளது என்று ஒருவர் ஆய்வு செய்தார். அதுதான் ஒருவரின் ஆளுமை சார்ந்த விமர்சனம். இன்னொருவர் ஒரு ஆய்வு செய்தார். பாரதி ஒரு கோழை, ஆங்கிலேயனிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் என்று கட்டுரை எழுதியிருக்கிறார். பாரதியின் கடிதம் கூட அக்கட்டுரையில் உள்ளது. ஆனால் ” பாரதி கோழையாக இருந்தால் எனக்கென்ன? அவர் கவிதை படித்து எனக்கு வீரம் வருகிறதே, அது போதும் ” என்றேன் நான்.

இது தவிர வேறோர் வகையான விமர்சனம் உண்டு. ஸ்லம்டாக் மில்லியனரை உத்தமத் தமிழ் எழுத்தாளர் கடுமையாக விமர்சித்து எழுதியிருப்பதாக் அறிந்தேன். அதுதான் சரி. காரணம், அவர் ஒரு இந்துத்துவவாதி. அப்படிப்பட்டவர்களுக்கு அந்தப் படம் எரிச்சலையே தரும். இப்படிப்பட்ட கோட்பாட்டு ரீதியான விமர்சனங்கள் அல்ல என்னுடைய விமர்சனம். நான் ஒரு கனாய்ஸியர். இந்துத்துவத்தை முன்நிறுத்தும் படைப்பாக இருந்தாலும் அதில் ரசிக்கக் கூடிய அம்சங்கள் இருந்தால் அதையும் பாராட்டுவேன். விஷ்ணுபுரம் என்ற நாவல் இந்துத்துவத்தை முன்வைப்பதால் நான் திட்டவில்லை; அது படிப்பதற்கு சலிப்பூட்டுவதாக இருந்தது. அதனாலேயே திட்டினேன்.

20.2.2009.

சாருவுக்கு க‌டித‌ம் ‍ 2 – Zero Deegre – A week after with an American Girl

http://www.charuonline.com/aug08/vk9.html

*She*: I am reading your book

Me: the book that I gave you? how come you are reading it still?

*She*: Well, I am going to give my review after my second reading, I am going to read it once again.

Me: why

*She*: cos’ the book deals with different emotions, feelings and issues in each chapter and chapters are not in connection unlike other books

Me: ok you take your own time no problem

*She*: are the author and the translator same gender?

Me: why are you asking this question?

*She*: Because the perception and influence on certain things like Sex orientation….it’s different if the female is saying abt female than the guy is saying from the girl’s perception … I’ll explain it later once I am done with the book

Me: The author is a male and the translator is a female (major contribution from female)

*She*: It’s one of the rare and different styles …ok wait for an American view.

 Then the conversation went in different direction

 It was a surprise to read the “Serendipity” on Charuonline, my English was bad but your style in tamil is excellent. You wrote that letter more interesting in tamil than my English letter.

One Question what’s the exact meaning for “unmaththam” (the word in bharathiyar paadal) in tamil?

It’s from

Yazhini sunthar

சாருவுக்கு க‌டித‌ம் ‍ 1

http://www.charuonline.com/aug08/seren.html

ஹலோ சாரு,

அமேஸான் மூலமாக ஸீரோ டிகிரி கிடைக்கிறது என்று நீங்கள் தெரிவித்ததுமே மூன்று பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். விடுமுறைக்கு ஊருக்குச் சென்று விட்டுத் திரும்பியதும் பார்சல் வந்திருந்தது. மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். ஏனென்றால் அந்த நாவலை நான் படிக்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. முதலில் என் சக அமெரிக்க நண்பர்கள் படிக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். இவர்களில் ஒரு பெண்ணும் உண்டு. அவர் என்னை என் பார்க்கிங்கிலிருந்து என் அலுவலகத்துக்குக் கொண்டு விடும் ஷட்டில் ட்ரைவர். ட்ரைவிங்கை விட அவர் அதிகம் செய்வது படிப்பதுதான். என்று நினைக்கிறேன்.

அந்தப் பெண்ணின் கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் இருக்கும். சில தினங்களில் ஒரே நாளில் இரண்டு புத்தகங்களைக் கூட படித்து விடுவார். அந்தப் பெண்ணோடு நான் பொதுவான விஷயங்களைப் பற்றி அவ்வப்போது அளவளாவுவது உண்டு. சென்ற மாதம் ஒருநாள் அவரிடம் என்னுடைய தேசத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளரின் நாவலைக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். அதனால்தான் உங்கள் நாவல் பிரதிகள் கிடைத்ததும் அவ்வளவு சந்தோஷம் அடைந்தேன். சொன்னபடி அவரிடம் உங்களுடைய ஸீரோ டிகிரியை படிக்கக் கொடுத்தேன்.

மறுநாள் அந்தப் பெண்ணைச் சந்திக்க நான் எவ்வளவு ஆர்வமாக இருந்தேன். என்பதை உங்களால் யூகிக்க முடியாது. நான் அந்தப் பெண்ணிடம் ஏற்கனவே கேட்டிருந்தேன், அந்த நாவலைப் பற்றி அவருடைய கருத்தை எனக்குச் சொல்ல வேண்டும் என்று. ஒரு சராசரி அமெரிக்கருக்கு உங்கள் நாவல் எப்படியிருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். என்பதே என் விருப்பம்.

இனிமேல்தான் இந்தச் சம்பவத்தின் சுவாரசியமான பகுதி துவங்குகிறது. புத்தகத்தைக் கொடுத்த கணத்திலிருந்தே அந்தப் பெண்ணின் கருத்து என்ன என்பதை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் துரதிர்ஷடவசமாக அடுத்த நாளிலிருந்து அவரைக் காணோம். ஒவ்வொரு முறை அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போதும் அந்தப் பெண்ணை என் கண்கள் தேடும். ஆனால் அவர் இருக்க மாட்டார்..இப்படியே ஒவ்வொரு நாளாகச் சென்று கொண்டிருந்தது. Serendipity என்ற ஆங்கிலப் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் கதாநாயகன் தன்னுடைய தோழியைத் தேடித் தேடிச் சலிப்பது போல் நானும் அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாளில் மூன்று தடவை நான் பார்க்கிங்கிலிருந்து அலுவலகம் செல்வேன். ஆனால் அந்தப் பெண்ணைக் காணவே இல்லை. ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணுக்குப் பதிலாக வேறு வேறு ஆட்கள் இருப்பார்கள்.

கடைசியாக ஒரு வாரம் கழித்து இன்றுதான் அந்தப் பெண்ணை என்னால் மீண்டும் சந்திக்க முடிந்தது. நிச்சயமாக எனக்குத் தெரியும் அவள் அந்த நாவலைப் பற்றிப் பேசுவாள் என்று. அதனால் நான் மௌனமாக இருந்தேன். அப்போது அவள் வாயைத் திறந்தாள்.

என்ன சொன்னாள் என்கிறீர்களா? நாளை சொல்கிறேன்.

யாழினி சுந்தர்

12.8.2008.

பூமிக்கு ஒரு விசிட்

நீ
பிறக்கவுமில்லை
இறப்பதுமில்லை
சும்மா பூமிக்கு ஒரு விசிட் வந்திருக்கிறாய்
பூமியெங்கும் பூக்கள் இர‌ட்டிப்பாய் பூத்திருக்கின்றன
உன்னை வரவேற்க

வந்த இடத்தில்
இன்று நீ
என்னுடயதாய்
நான் உனக்குமாய்
மேலும் கீழுமாய்
முன்னும் பின்னுமாய்
அம்மாவிற்கு ஆதாரமாய்
உற்றார்க்கு சந்தோஷமாய்
பின்னாளில் நீ
பெண்னாய், ம‌னைவியாய், தாயாய்
நீ செய்யப்போகும் தொழிலோ,
கலையோ சார்ந்த
ஒரு நபராய்
மற்றும் பலவுமாய் அறியப்படுவாய்
………….
…………..
நான் எபோதும் நீ
நல்ல மனுஷியாய்,
நீ நீயாய்
இருப்பதயே, அறியப்படுவதயே
விரும்புகிறேன்
………
…………
போகும் இடத்தில்
நீயோ நானோ இருக்கப்போவதில்லை
இரண்டு ஆத்மாக்கள்
நேருக்கு நேர், சம தளத்தில்
சந்தித்துக்கொள்ளலாம்
அதுவும் தற்ச்செயலாக
பிறகு மீன்டும் விசிட் போகலாம்
யாருக்குத்தெரியும்

ம‌க‌ள்

என் எண்ணங்களில்
நீ இல்லை
வண்ண கனவுகளில்
நீ இல்லை
உள்ளத்தில் இல்லை
உணர்வுகளில் இல்லை
காரணம்
நானே நீயாகியிருப்பதால்
ஆத்மா ஒன்றுதான் என்றாலும்
முன்பு நான் ஆணாக இருந்தேன்
இப்பொழுது பெண்ணாகியுள்ளேன்
எனக்கு இப்பொழுது
ஒரு கவலை
முன்பிருந்த என்னைவிட
இப்பொழுதுள்ள என்னை
கொஞ்சம் better ஆக
உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான்

ஆறாவ‌து க‌ண்ணீர்த்துளி

நேற்றைய‌ இர‌வில்
உன் நினைவு வேத‌னைக‌ள்
என் இத‌ய‌த்தை அழுத்த‌
வெடித்து சிதறிய‌ ஆறு க‌ண்ணீர்த்துளிகள்
என் த‌லைய‌ணையை ந‌னைத்த‌ன‌

உன் மெண்மையான குர‌லையும்
அழகிய‌ புன்ன‌கையையும்
இழ‌ந்த‌மைக்காக‌ விழுந்த‌து முத‌ல் துளி

இர‌ண்டாவ‌து
என் நினைவில் க‌ல‌ந்துவிட்ட
வெட்க்கத்தில் சிவ‌க்கும்
தேவ‌தை முக‌த்திற்கு

சந்தேக‌மேயில்லை
மூன்றாவ‌து துளி
என்னை வ‌ருடிவிடும்
மிருதுவான அழ‌கிய‌
விர‌ல்க‌ளுக்காக‌

இவ‌ற்றிற்கு பிற‌கு
வ‌ந்த‌ நான்காவ‌து துளி
உன் உள்ள‌ங்கையில்
விழ‌வேண்டிய‌ க‌ண்ணீர்த்துளிக‌ள்
என் த‌லைய‌ணையில்
விழுகின்ற‌ன‌வே ….

மிகுந்த‌ அர்த்தத்துட‌ன்
விழுந்த‌து ஐந்தாவ‌து துளி
என் பாச‌த்தை முழுமையாக‌
வெளிப்ப‌டுத்தாம‌ல் விட்டு விட்டு
ஏங்கித்த‌விக்கும் என் ஏக்க‌த்திற்காக‌

என் ப்ரிய‌மான‌வ‌ளே
உன்னை இழ‌ந்து த‌விக்கிறேன்
எப்போது உன் ம‌டியில்
புதையும் என் முக‌ம்?
நினைக்கும்போதே
வெடித்து தெரித்த‌து
அந்த‌ க‌ண‌மான‌
ஆறாவ‌து க‌ண்ணீர்த்துளி

தோழியும் காதலியும் – ஆகஸ்ட் 15

என்னால்
மறந்து போக முடியாத
ஒரு முகத்தை
மறக்கமுடியாத
நாளான ஆகஸ்ட் 15, 1999
அன்று சந்தித்தேன்
முதலில் தோழியானாள்
பின்பு காதலியானாள்
அதன் பிறகு மனைவியானாள்
இன்று தாயாய் அவளை
தினம் தினம் சந்திக்கிறேன்
தோழியும் காதலியும்
கானாமல் போனதில்
கொஞ்சம் வருத்தம்தான்
வேரொரு ஆகஸ்ட் 15தில்
அவர்கள் இருவரையும்
மீண்டும் சந்திப்பேன்
என்ற நம்பிக்கையில்
அவளுக்கு
சுதந்திரதின வாழ்துக்களை
கூற விரைகிறேன்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑