உள்ளப் பிரிதல்

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்”

என்றென்றும் நான் அன்பு செய்யும் என் பிரியமான கீத்துமா,

என் பிறந்தநாள் வருகிறது என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தோன்றிய சில எண்ணங்களில் ஒன்று என் வாழ்வை பின்னோக்கி பார்த்து அதில் நடந்த அத்தனை நல்லவைகளுக்கு நன்றியும் அல்லவைகளுக்கு மன்னிப்பும் கேட்கலாம் அதுவும் நம் மனதிற்கு நெருக்கமான ஒருவரிடம் என்று தோன்றியது. கடந்த இரண்டாண்டுகளில் நம் வாழ்வில் நடந்த பேரின்பம் நாமும் நம் காதலும் அதனால் உனக்கு இந்த கடிதம் எழுதுவதே சரியாக இருக்கும்.

நாம் இருவரும் அறிமுகமாகி ஒரு வருடத்திற்கும் மேலாகியும் பிறகுதான் நெருங்கினோம், காலம் இயல்பாக நமக்குள் நெருக்கத்தை கொண்டுவந்தது. இந்த ஒரு வருடத்தில் நாம் இருக்கும் வாட்சப் குழுக்களில் குறிப்பாக பழைய விவாத மேடை குழுவில் நான் அனுப்பும் குறுஞ்செய்திகள் என் வழக்கமான குறும்போடுதான் வரும் அதற்கு உன்னிடம் இருந்து வரும் பதில் அழகாகவும் ரசிக்கும் படியும் இருக்கும். அப்படி நாம் குழுக்களில் பரிமாறிக்கொண்ட செய்திகள் நம் மனதில் ஒரு சுகந்தத்தை கொடுக்கும். என் வாழ்வில் மேடை பேச்சு என்ற ஒன்று நான் மிகவும் ரசித்து செய்தது, அது நமக்குள் இப்படி ஒரு பந்தத்தை உருவாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த பேச்சு வடிவம் வழியாக தமிழ் நமக்கு, உன்னை எனக்கும் என்னை உனக்கும் தந்துள்ளது. தமிழுக்கும் உனக்கும் நன்றி சொல்ல வேண்டும். அந்த ஒரு வருடம் காலமும் தமிழும் நம்மை உரு போட்டு நம் காதலை கரு கொள்ளச்செய்துள்ளது.

நாம் சந்தித்து ஒரு வருடம் கழிந்த பிறகு வந்த அந்த அந்த பேச்சு மேடைத் தயாரிப்பு கூட்டத்திற்கு நீ முன்பே கலர் பேலட் எல்லாம் வைத்து அதற்கு ஏற்றாற்போல் உன் ஆடை நிறங்கள் எல்லாம் ட்ரியல் பார்த்து தயாரான பின்பும் அடுத்த நாள் கூட்டத்தில் உன் மைக் சரியாக வேலை செய்யாமல் போனதில் உண்மையில் எனக்கு வருத்தம். அன்று மாலை ஜூம் ல் ஒரு மணி நேரத்திற்கும் மேல பேசியபோது என் மனதில் எந்த விதமான எதிர் பார்ப்புமின்றி உன்னை பற்றி எனக்கு (prediction) சொல்லத் தூண்டியது, சொல்லத் தோன்றியது எது என்று தெரியவில்லை.ஆனால் எல்லாம் எங்கிருந்தோ கொட்டியது. அதிலும் உன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை, உன் வாழ்வில் இருந்து இப்பொழுது இல்லாமல் போன உனக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களை பற்றியெல்லாம் சொல்ல நேர்ந்ததற்கு காரணம் உன்னோடும் உன் எண்ணங்களோடும் ஆற்றலோடும் அடர்த்தியான தொடர்பு இருந்ததால் தான். இப்படி உன்னை பற்றியெல்லாம் நான் சொன்ன பிறகு உன்னிடமிருந்து வந்த “ஐ அம் இம்ப்ரெஸ்டு சேரன்” என்ற சொற்பதத்தை நீ சொன்ன விதம் இருக்கே உலக பிரசித்தி பெற்ற ஓவியர்களின் ஒய்யாரமான ஓவியமாய் தெரிந்தாய். தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டு வெளிர் மஞ்சள் ஒளியில் மிருதுவான குரலில் வாஞ்சையோடு நீ சொன்னது என் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

நடுவில் உனக்கு ஒரு செய்தி இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில் மாதவி தன் காதலன் கோவலனுக்கு எழுதிய கடிதம் தான் முதல் முதலில் தமிழில் எழுதப்பட்ட கடிதம் என்று அறிகிறேன். அவள் எழுதிய அந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட கோவலன் அந்த கடிதத்தை கொண்டு வந்தவரிடம் கொடுத்து அனுப்பி இந்த கடிதத்தை போய் என் தந்தையிடம் கொடு என்று சொல்லிவிடுவான். காரணம் பெரும் செல்வந்தரான கோவலனின் அப்பா தன் காதலி மாதவி தீயவள் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் அந்த கடிதத்தை அவரிடம் காண்பித்தால் மாதவி எவ்வளவு நல்லவள் என்று தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் மேலும் அவள் மேல் எந்த தவறுமில்லை எல்லா தவறும் என்மேல் தான் என்று தன் அப்பாவிற்கு புரியும் என்பதால் அவன் அப்படி சொன்னான் அதற்கு காரணம் அந்த கடிதம் அவ்வளவு அழகாக எழுதப்பட்டு அது சொல்லும் செய்தி .

அந்தக் கடிதத்துக்கும் நான் உனக்கு எழுதும் கடிதத்திற்கு என்ன தொடர்பு என்றால், அது போன்றதொரு கடிதமாக இது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதில் கோவலன் நினைத்தது போல் எல்லா தவறும் தன்மேல் தான் என்று அவன் சொல்லுவான் ஆனால் இங்கு நம்மிடையே சரி தவறு என்று எதுவும் இல்லை. காதல் பொதுவா முடிவதே இல்லை எந்த ஒரு விதிகளுக்கும் உட்பட்டதல்ல நியூட்டனின் மூன்றாம் விதியை தவிற. இருந்தாலும் நான் உன்னிடம் காண்பித்தக் கோபத்திற்கும் பல நேரங்களில் உன்னை கத்தியத்திற்கும் மனம் என்னையே நொந்துகொண்டதால் இந்த கடிதம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் நம் வாழ்வில் நிகழ்ந்த பேரின்பம் நீயும் நம் காதலும் இந்த கடிதம் என் மனதில் உள்ள அத்தனை நினைவுகளையும் அத்தனை நிகழ்வுகளையும் அனிச்சையாக எழுதுகிறேன். அன்பு பரிவு பாசம், நேசம் காதல் சாபம் ஏக்கம் இவைகளை தாண்டி நமக்குள் இருந்த ரெஸ்பெக்ட், கம்யூனிகேஷன் பிரண்ட்ஷிப் இவைகள் தான் நம் காதலை உறுதிப்படுத்தியது அதுதான் நம் காதலை தனித்துவமாக்கியது.

இன்றைய ரிலேஷன்ஷிப் கோச்சஸ் கவுன்சிலர்ஸ் சொல்லுகின்ற அத்தனையும் நமக்குள் இருந்தது. நீ அனுப்பி இருந்த அந்த சேர் உள்ள ஜோடிகள் உட்கார்ந்த வீடியோவில் நாம் நம்மை அதில் பொருத்தி பார்த்த பொழுது அதிக இடைவெளி இல்லாமல் அமர்ந்திருப்போம் என்றே இருவரும் சொன்னோம் அதுதான் நம் காதலை அர்த்தப்படுத்தியது அடித்தளத்தை வலிமையாக்கியது அந்த காதலுக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி கண்ணம்மா.

நம் ஜூம் காலுக்குப் பிறகு நாம் பேச ஆரம்பித்த சில நாட்களில் ஒருமுறை நான் சொல்லாமல் என் காலேஜ் ஓல்ட் பிரண்ட்ஸ் பார்க்க போயிருந்தேன் நீ எனக்காக போன் பண்ணி பார்த்துவிட்டு நான் கொஞ்சம் லேட்டாக வந்து உனக்கு போன் பண்ணினேன் அப்போ உன் பேச்சிலிருந்து பரிதவிப்பு, காத்திருந்த வெறுமை, அப்ப நீ என்னிடம் சொன்ன சொற்கள் எல்லாம் என்றும் மறக்க முடியாதவை. இவரைப் பற்றி தெரியாமல் இப்படி பழக ஆரம்பிச்சுட்டோமே என்று உனக்கு சந்தேகம் வந்துவிட்டதாக சொன்னாய். அந்த இடத்தில் நெட்வொர்க் கிடைக்காததால் வெளியே வந்து ஒரு தெரு தள்ளி கார் ஐ பார்க் பண்ணிவிட்டு உன்னை அழைத்தேன் அந்த இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நாம் பேசினோம் அன்றைய தினம் தான் உன் பேச்சில் உன் காதலை முழுமையாக உணர்ந்தேன் அந்த காதல் உன் உள்ளத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்ற எண்ணம் தான் நானும் என் மனதில் எந்தவித சந்தேகமும் இன்றி என் மனதை முழுவதுமாக நம் காதலுக்கு ஒப்புக்கொடுக்க காரணம். இயல்பான அந்த பேச்சு அன்று உன் குரலில் இருந்து எதிர்பார்ப்பு, வாஞ்சை எல்லாம் என்னை கட்டிப்போட்டது அன்று ஒரு முடிவு எடுத்தேன் என் மனதில், இனிமேல் நீ அழைத்தால் உன்னை ஒருபோதும் காக்க வைக்க கூடாது என்று, இதை கூடிய மட்டும் காப்பாற்றுகிறேன் என்று நினைக்கின்றேன். மிக சொற்பமான தருணங்களில் தான் உன் அழைப்பை எடுக்க முடியாமல் போயிருக்கும்.

அன்று அந்த தருணத்தில் நாம் பேசிய பேச்சின் ஒரு சில விஷயங்களுள் ஒன்றுதான் நான் அந்த வருடம் என் பிறந்தநாளுக்கு பௌர்ணமி அன்று கடற்கரையோர அழகிய அந்த நகரில் தங்கலாம் என்று கேட்டேன் அது கஷ்டம் அப்படி இப்படி என்று சொல்லி தட்டி கழித்தாய். சரி அப்படியே நாம தங்கினாலும் இருவரும் வேறு வேறு அறையில் தான் தங்கணும் என்று சொல்லிவிட்டு நாம் பேசி சிரித்ததை இங்கு எழுத முடியாது. நீ போட்ட அந்த கண்டிஷன் உன் மனதிற்கு தெரியும் என்ன நடக்கும் என்று அது ஒரு சுகந்தமான மனநிலை இது குறித்து நாம் ஜாலியாக நிறைய பபேசினோம்.

அதன் பிறகு வீடு வந்து பப்புவை தூங்க வைத்துவிட்டு நாம் மீண்டும் பேசினோம் அந்த இரவு தான் நாம் நம் காதலை உறுதி செய்த இரவாக நாம் மாற்றினோம் அப்படி ஒரு நாளுக்கும் தருணத்திற்கும் நன்றி. இப்படிப்பட்ட அந்த நாளை இந்த வருடம் மறந்துவிட்டேன் அதற்கு ஒரு மிகப்பெரிய சாரி.

தொடரும் ……..

நினைவு கடிதம்

வங்கக் கடலில் புயல் சின்னம் (கொடி) ஏற்றப்பட்டு இருந்ததை விடுதியின் மூன்றாவது மாடியின் வெளி தளத்தில் துணி காயப் போட்டிருந்த கம்பியைப் பிடித்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் வளன். கடந்த வாரம் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை அம்மா அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க வந்தார்கள். வீட்டிலிருந்து சாப்பாடு, தின்பண்டங்கள் கொண்டுவந்து ஊட்டி விட்டு பிள்ளைகளுடன் இரண்டு மணிநேரம் இருந்து கொஞ்சி, கெஞ்சி விட்டுப் போனார்கள். கடந்த இரண்டு மாதமாக யாரும் தன்னைப் பார்க்க வரவில்லை அதை நினைத்து வந்த அழுகையை அடக்க மொட்டை மாடிக்கு வந்து கடலை வேடிக்கை பார்ப்பது வழக்கம். கடலை பார்த்தால் மனம் இலகுவாகிவிடும். அப்படித்தான் அவனுக்குக் கடல் பிடிக்க ஆரம்பித்தது. அவ்வளவு தண்ணிய பார்க்கும்போது இவன் கண்ணுல வர தண்ணீர் காணாம போயிடும். அதைத்தான் இன்றைய கவிஞன் கண்ணுக்குள்ள கடல் கசிவதை பாருன்னு எழுதியதைக் கேட்கும் போதெல்லாம் தோணும்.

கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டே தன் கால் சட்டையிலிருந்து அந்த வெளிறிய நீல நிற இன்லேண்ட் லெட்டர் ஐ எடுத்துப் படிக்க ஆரம்பித்திருந்தான். அதில் உள்ள ஒவ்வொரு வரியும் அவனுக்கு மனப்பாடம். வீட்டு நினைப்பு வரும்போதும் தனியாக இருக்கும்போதும் கடைசியா வந்த கடிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிப்பான்.

போனமாதம் அப்பா அவனுக்கு எழுதிய அந்த கடிதத்தில் வழக்கம் போல வீட்டின் கஷ்டம், ஏன் படிக்கனும் , 7 பேர் உள்ள வீட்டல எவ்வளவு செலவாகுது, அம்மா இறந்தபிறகு உதவிக்கு யாரும் வராததால் வீட்டு வேலை செய்யப் பெரிய அக்காவை பள்ளி ல இருந்து நிப்பாட்டினது, என்று மனதைக் கனக்கும் கடிதம் அதன் இறுதி இரண்டு பத்திகளில், ஆபிரகாம் லிங்கன் தன் பிள்ளையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம், , ஊதாரி மைந்தன் கதை, பிற பைபிள் கதைகள், காந்தி, நேரு, திருக்குறள் என்று முடியும். இந்த கடிதம் நேரு தன் மகள் பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதம் பற்றி எழுதியிருந்தார் அப்பா.

“நேரு அப்போது தன் மகளுக்கு அருகில் இருக்க முடியாத சூழல். ஒரு தந்தையாக.. தன் மகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்ற வருத்தம் நேருவுக்குள்ளும் இருதிருக்குமாயிருக்கும். அந்த தவிப்பைப் போக்கிக் கொள்ளவே மகளுக்குக் கடிதம் எழுதினார்

மகளே, நானும், நீயும் சேர்ந்திருக்கும் போது, நீ என்னருகில் அமர்ந்துகொண்டு என்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பாய், நானும் அவை அனைத்திற்கும் பதில் சொல்ல முயற்சித்துக் கொண்டிருப்பேன். ஆனால், இப்போது நீ முசெளரியில் இருக்கிறாய். நானோ அலகாபாத்தில்… இப்போது நம்மால் அருகமர்ந்து பேசிக்கொள்ள முடியாது. அதனால் தான் நான் உனக்கு அடிக்கடி கடிதம் எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.”

“இப்படி நேரு இந்த பூமிக்குக் கீழே உள்ள அத்தனை விஷயங்களைப் பற்றியும் வரலாற்றுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் கடிதங்களாக தன் மகள் இந்திராவுக்கு எழுதினார். இந்திராவும் அப்பாவுக்குக் கீழ்ப்படிதல் உள்ள பிள்ளையாக இருந்தார். அப்படி நான் எழுதும் இந்த கடிதங்களில் நமது பூமியின் கதை, இந்தப் பரந்த பூமியில் சிறியதும், பெரியதுமாகப் பரவி இருக்கும் எண்ணற்ற தேசங்களின் கதைகள், அந்த தேசங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்விதமாக வேறுபடுகின்றன போன்ற கதைகளை எல்லாம் இருக்காது. நம் குடும்பத்தின் கதை, இறைவன் எப்படி நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிறார், எப்படி நீ ஒழுக்கமாகவும் சிக்கனமாகவும் இருக்க வேண்டும். நீ உன்னை மட்டுமே நம்பி முன்னேற வேண்டும் அப்படி நீ படித்து முன்னேறினால் பல தேசங்களுக்கும் சென்று அதன் கதைகளை நீயே அறிந்து கொள்ளலாம். என்று தான் எழுத முடியும்.”

எத்தனாவது முறை அந்த கடிதத்தைப் படிக்கிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை. கடிதத்தின் சில சொற்கள் நீர் பட்டு அழிந்திருந்தது. அந்தவரிகள் அவனுக்கு அத்துப்படி. படித்து விட்டு கண்ணைத் துடைத்து விட்டு கடலை பார்த்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக ஹாஸ்டல் பெல் அடிக்க, அந்த பெல்லுக்கு முதல் தளத்தில் கொடிக்கம்பத்திற்கு முன் எல்லா மாணவர்களும் கூடவேண்டும். பள்ளியின் கொடி அரைக்கம்பத்தில் இருந்தது. திருவெற்றியூரில் ஒன்று முதல் ஐந்து வரையான டான்போஸ்க்கோ ஹாஸ்டலின் வார்டன் சிஸ்டர் ஐரீன் வழக்ததைவிட , உற்சாகமின்றி இருந்தார், மூன்றாவதாக நின்றிருந்த வளனைப் பார்த்து இந்த அறிவிப்பைப் படி என்று தாளை நீட்டினார்.

நமது பாரத பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னை இந்திராவின் ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் மூன்று நிமிடம் அமைதியாக ஜெபிப்போம்.

வளனின் கண்ணில் கடல் கசிந்து கொண்டிருந்தது.

பகிர்

பில் கேட்ஸ் பரிந்துரைத்த புத்தகங்ககளில் ஒன்றான “உலகம் உண்மையில் எப்படி இயங்குகிறது” என்பது பற்றிய பத்தியைப் படித்துக் கொண்டிருந்த தேவகியின் கவனம் சிதையத் தொடங்கிய நேரத்தில் அலைபேசி ஒலித்தது.

அழைப்பிற்காகவே காத்திருந்தவள் போல ஆர்வமாக எடுத்து

 “வணக்கம் பிரதாபன் சார் எப்படி இருங்கீங்க?”

“உனக்கு குட் மார்னிங்  சொல்றதா இல்ல குட் ஈவினிங் சொல்லனுமா?”

“உங்களுக்கு நம்ம ஊர்ல குட் மார்னிங் னா எனக்கு கலிஃபோர்னியால குட் ஈவினிங் சார், எனக்கு இப்ப இரவு 8 மணி உங்களுக்குக் காலை 8.30.”

“ஓ சரி அடுத்த முறை நான் உனக்குச் சரியா மணி என்ன  காலையா மாலையா ன்னு சொல்றேன் பாரு”

கொரோனா கொஞ்சமாய் பூமியின் வடக்கு திசையில் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்த காலத்தில் தன் உறவினர் திருமணத்திற்கு இந்தியா சென்றவளுக்கு பல ஊர்களுக்குச் சென்றுவர அவள் தம்பி ஏற்பாடு செய்து தந்த ஓட்டுநர் தான் பிரதாபன்.

மார்ச் மாதத்தில் ஏற்பட்ட பரிச்சியம், பிரதாபனுக்கும் தேவகிக்கும் உரையாடலாய் வளர்ந்து அமெரிக்கா வரை வாட்ஸப் அழைப்பாய் காரணம் தேவகியின் வேடிக்கை பார்க்கும் குணமும் மனிதர்களை உற்று நோக்கி அவர்களின் உன்னதங்களை, கீழ்மைகளைத் தோண்டி எடுக்கும் பாதாளக் கரண்டி போன்ற சுபாவமும்தான்.

அவள் திரும்பி அமெரிக்கா வந்த அடுத்த நாளிலிருந்து ஊரடங்கு ஆரம்பித்தது. அது முதல் பிரதாபனிடம் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வாட்சப்பிலோ ஜூம் மூலமாகவோ பேசுவது முக கவசம் போல் பழக்கமாகிவிட்டது.

அன்று பக்கத்தில் உள்ள அமராவதிக்குச் சென்று வரக் காரை ஓட்டுவதற்கு வந்த பிரதாபன் சார் பற்றி ஏற்கனவே தேவகியின் தம்பி “உனக்கு நல்லா பொழுது போகிற மாதிரியான ஒருத்தரதான் ஏற்பாடு செஞ்சியிருக்கேன், அவர் போன் நம்பரையும் உனக்கு அனுப்பியிருக்கேன்” என்று தொலைபேசியிருந்தான்.

 காரில் ஏறி அமர்ந்ததும்

 வணக்கம் மேடம், அமராவதி போறதுக்கு 1 மணி நேரம் ஆகும், பாட்டு கேக்குறீங்களா? புத்தகம் படிக்கிறீங்களா இல்ல அமெரிக்கால இருந்து வந்து நம்ம ஊரைப் பத்தி நீங்கக் குறை சொல்றதை நான் கேட்டுட்டு வரவும் தயார்.”

“இல்ல எதுவும் வேணா நான் அமைதியா வண்டி ஓட்டனும் நீங்க உங்க போன்ல மூழ்கிடுவீங்கன்னா நான் வண்டி ஓட்றது கஷ்டம். என்ன சொல்றீங்க?”

இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்க்காத தேவகி இவர் வழக்கமான ஓட்டுநர் இல்லை என்று புரிந்துகொண்டு சிறிய புன்னகையுடன் “மேடம் எல்லாம் வேணாம்ங்க, தேவகினு பேர் சொல்லி அழைக்கலாம்” என்று பாந்தமா சொன்ன பதிலில் பிரதாபனுக்கு தேவகியின் மேல் சிறிய நல்லெண்ணம் துளிர்த்தது.

இப்டி கேள்வி கேட்டதால நான் கொஞ்சம் முரட்டு ஆளுன்னு நெனச்சிடாதீங்க, பிரயாணமும் சாப்பாடும்  மத்தவங்களோட பகிர்ந்துக்கிட்டாதான் சுவைக்கும் அதனாலதான்.

தம்பி சொன்னது சரி, அமராவதியை பார்ப்பதை விடவும் இந்த பயணம் இனியதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கை  கூடியதில் ஒரு அமைதி முகத்தில் தானாக தவழ ஆரம்பித்து அது பிரதாபனிடம் தொற்ற ஆயத்தமானது.

இந்த மனிதனிடம் தருவதற்கு நெறய இருக்கிறது திறக்கப்படாத வாட்ஸப் மெஸ்ஸேஜ்ஸ்  போல என்று புரிந்துகொண்ட தேவகி

“நாம பொறக்கறதே பகிர்ந்துக்கத்தானே சார்,” என்று முதல் கல்லை எறிந்தாள்.

அதைத்தான் கார்ல் மார்க்ஸ் சொன்னாரு,  ஆனா இன்னைக்கு மதத்தால நடக்குற சண்டைய பார்க்கும்போது அதுல மட்டும் காந்தியும் கார்ல் மார்க்ஸ் ஒரே மாதிரி எப்படி சொன்னாங்கனு புரியல. மதம் மக்களுக்கு அபின் என்கிறார் மார்க்ஸ் , மதம் துன்பப்படும் மக்களுக்கு தேவையான போதை என்றார் காந்தி.

அவுங்க சொன்னது இருக்கட்டும் நீங்க என்ன சொல்றீங்க?

“பிரேயர் கடவுளை மாத்தாது ஆனா மனிதனை மாத்தும் அதக்கு ஒரு சட்டகம் தான் மதம்.”

“மனிதக் குலத்திற்குக் கற்பிக்கப்பட்ட பெரிய பொய்கள் கடவுளும், மதமும். நாம் கட்டிவைத்துள்ள அனைத்து மத ஆலையங்களிலும் நிச்சயம் கடவுள் இல்லை, இருக்க வாய்ப்புமில்லை.”

எப்படி சொல்றீங்க?

என்னமா, எல்லாருக்குள்ளும் கடவுள் இருக்குனு சொல்றவங்களே மதத்தின் பெயர்ல அவுங்க சொந்த மதத்தைச் சேர்த்தவனையே கொல்றாங்க. உன்னை நேசிக்கிற மாதிரி அடுத்தவனை நேசின்னு சொன்னா முத்தல்ல தன்னை நேசிக்கிறது எப்படினே தெரியல.

புதிதா ஒரு மனிதன் பிறக்கப் போவதில்லை, நாம் தான் நம் சிந்தனையிலிருந்து நம் கற்பிதங்களிலிருந்து வெளியே வந்து புதிதாகப் பிறக்க வேண்டும், இதெல்லாம் நான் சொல்லல ஓஷோ, ஜிகே சொல்றாங்க. 

நாம ஒரு நல்ல புத்தகத்தைத்தான் புரட்ட ஆரம்பித்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டாள் தேவகி.

சினிமாவில் காண்பிப்பது போலச் சாலையின் இரண்டு பக்கமும் நிழல் தரும் மரங்கள் இந்த சாலையில் மட்டும்தான் என்று சொல்ல பிரதாபன் வாயெடுத்த நொடியில் நுங்கையும் இளநியையும் பார்த்ததும் 

சார் இளநி சாப்பிடலாமா என்றாள்.

ஓ தாராளமா

உங்களுக்கு இளநியா நுங்கா?

இப்ப இளநி சாப்பிடுவோம்,  நுங்கை வாங்கிட்டு போயி திரும்பி வரும்போது சாப்பிடலாம்.

சார் நல்ல யோசனை

அண்ணே ரெண்டு இளநி

எனக்கு வழுக்கை வேணாம்பா வெறும் தண்ணி இருந்தா போதும்.

எனக்கு எப்படி இருந்தாலும் பரவாயில்ல

எவ்வளவு ஆச்சுங்க?

மொத்தம் 70 ரூவாமா இளநி 50, 12 நுங்கு 20 ரூவா, நீ பேரம் பேசாம வாங்குனதால ரெண்டு நுங்கு சேர்த்து போட்டிருக்கேன்.

தேவகி சொன்ன பணத்தை குடுத்துவிட்டு திரும்ப 

பிரதாபன் கார் கன்னாடியை துடைத்து விட்டு கையை துணியால துடைத்துக்கொண்டு ஏறி அமர்ந்தார்.

இந்தாங்க சார் என்று தன் கையிலிருந்த சானிடைசர் ஐ அவர் கையில் சிறிது ஊற்றி விட்டு தானும் துடைத்து கொண்டாள். பிரதாபன் உள்ளங்கைகளை பர பர என்று தேய்த்துவிட்டு காரை முடுக்கினார்.

அமெரிக்கால இருந்து வரவங்க ரெண்டு ரகம். கேட்ட காசை குடுத்துட்டு வாங்கிட்டு போறவங்க, இன்னோன்னு வெலைய கேட்டதும் ஐயையோ இவ்வளோ வெலையா, நாலு வருஷம் கழிச்சு நம்ம ஊருக்கு வரதால எல்லாம் வெலை எறிபோச்சு ன்னு பேரம் பேச ஆரம்பிப்பாங்க 

ஏன் சார் இங்க இருக்குறவங்களும் அப்படித்தானே 

இங்க இருக்குறவங்க பல ரகம் இருக்காங்க ன்னு சொல்லிட்டு சிரித்தார்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்மா இளநி காசை பணம் தரும்போது கடைசியா கழிச்சிட்டு குடுமா

அதை பாத்துக்கலாம் சார்.  அந்த இளநி கடை காரருக்கு பக்கத்துல ஒரு சின்ன பொண்ணு அழகா உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தா பாத்திங்களா?

வேற என்னமா பார்த்த?

எனக்கென்னவோ அவருக்கு பணத்தை எண்ண தெரியாதுன்னு நினைக்கிறேன்.

எப்படி சொல்ற?

அவர் பணத்தை வாங்கினதும் அந்த பொண்ணும் அவரும் பார்வையை பரிமாறிக்கிட்டாங்க அதுல காசு சரியாதான் இருக்குனு அந்த பொண்ணு சொன்ன மாதிரி எனக்கு தோணிச்சு.

பரவாயில்லமா சரியாதான் சொல்லியிருக்க, அது அவரோட பொண்ணுதான் 6 வது படிக்குது. அவருக்கு எழுதப் படிக்க தெரியாது, பொண்ணுதான் கணக்கு வழக்கு பாக்குது.

அப்படியா? நான் நினைச்சது சரியா? எனக்கு அடுத்தவங்களை வேடிக்கை பாக்கிறது ரொம்ப பிடிக்கும் சார்.

அது ஒரு நல்ல குணம்மா, சினிமால எங்க இயக்குனர் சொல்லிட்டே இருப்பார் உன்னை சுத்தி நடக்கறதை வேடிக்கை பாரு அதுல இருந்து மனிதர்களை படிக்கலாம் அதை உன் கதைகளில் சொல்லுன்னு.

அடுத்தவங்களை வேடிக்கை பாக்கறதை விட, நம்மளை நாமே வேடிக்கை பாக்கிறது இருக்கே அது ஒரு அலாதியான செய்கை மா, கொஞ்சம் தள்ளியிருந்து நாம செய்த அத்தனையையும் , அறிவாளி என்று நினைத்து செய்த கோமாளித்தனங்களை, கோபத்தை, நடத்தையை, இப்படி நம்மை நாமே வேடிக்கை பாக்கிறது நம்மை நல்லா சுத்திகரிக்கும்.

சார், நீங்க உண்மையிலே ஓட்டுநர் தானா? இல்லை ஓய்வு நேரத்தில் இப்படி ஓட்டுநர் ஆ போயிட்டிருக்கீங்களா?

வண்டி ஊரிலிருந்து வெளியேறி அமராவதி செல்லும் தார்ச் சாலையில் வேகம் பிடித்தது, 

நமக்கு எங்கம்மா ஓய்வு எல்லாம்?

காத்து உள்ள போறது எப்ப நிக்குதோ அன்னைக்குதான் ஓய்வு

சொல்லுங்க சார் எதோ சொல்ல வந்தீங்களே அதை சொல்லுங்க?

பிரதாபனும் நாம எதையோ சொல்ல வரோம் என்பதைக் கூர்ந்து நோக்கும் தேவகியின் ஆர்வத்தால் தூண்டப்பட்டு

அது 1980 களின் இறுதி 90 களின் தொடக்கம் மா

சினிமாவில் மிகப் பெரிய இயக்குநர் பிரம்மராஜனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆச்சு மொத மொதல்ல ஆயிரம் ரூவா அட்வான்ஸ் வாங்கினேன் ஒரு படத்துக்கு, அதை எடுத்துட்டு அவுட்டோர் ஷூட்டிங் போவதற்கு முன்னாடி ஜி ஹெச் ல ஜெனரல் வார்டில் இருந்த  அப்பாவைப் போய் பாக்குறேன்.

“என்னப்பா வேணும்?” அப்பாட்ட கேட்டேன் 

அவர் நல்லா சுவையா சாப்பிடுவார்

“டேய் எனக்கு புகாரியில இருந்து பிரியாணியும்,  ஒரு கதர் பனியனும் வாங்கி குடு, கச கசன்னு இருக்கு, காத்தில்ல ஒன்னும் இல்ல, என்னடா ஆஸ்பித்திரி இது?”

 அப்பவும் சமுதாயத்தை பார்த்துதான் திட்டுறார்.

“இவுங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு,”

மத்த நோயாளிகளைப் பார்த்து இவரு பாவம் பாக்கிறார்.

பாவம் பாக்குறார்னு பிரதாபன் சொல்லும்போது ஒரு நமட்டு சிரிப்போடு சொன்னார்.

சரின்னு போயிட்டு அதை வாங்கி கொடுத்ததுதான் நான் அவருக்கு சம்பாதித்துக் கொடுத்த …..

முழுசா சொல்லாமல் அந்த வேதனையைச் சிரிப்பில் மடை மாற்றினார் பிரதாபன்.

தேவகியும் அதே மாதிரியான சிரிப்பைப் பதிலாகத் தந்துவிட்டு அவரை பார்த்தாள்.

“நான் இந்த மாதிரி அவுட்டோர் போகணும்பா உனக்கு வேற உடம்பு சரியில்லையேபா”னேன்.

“டூட்டி பஸ்ட் , போ அதுதான் உன்னை காப்பாத்தும். அம்மாவை பாத்துக்கோ.”

அவருக்கு ஒருவேளை தெரிஞ்சிருந்ததோ என்னவோ தெரியல,

சொல்லும் போது பிரதாபனின் குரல் நெகிழ ஆரம்பித்திருந்தது அவரின் ஆள்காட்டி விரலை மூக்கில் வைத்துத் தேய்த்துக்கொண்டே சிறுது மௌனமானார்.

தேவகி கன்னாடியை கழற்றி துப்பட்டாவால் முகத்தை ஒற்றி எடுத்தாள்.

எங்கப்பா செல்வச் செழிப்பாகப் பிறந்து வளர்ந்தவர் காந்தியையும் பெரியாரையும் வழிகாட்டிகளாய் கொண்டவர்.

எப்படி இவுங்க ரெண்டு பேரையும் ஒருத்தர் ஒரே நேரத்துல      

பாலோ பண்ண முடியும்னு இப்ப இருக்குறவங்களுக்கு புரியாது அந்த மாதிரி நெறய பேர் இருந்தாங்க அப்போ.  

காந்தியவாதி, சுதந்திரப் போராட்ட தியாகி, எப்போதும் மக்களைப்பற்றியும் மக்களுக்காக வாரி வழங்கி ஏழ்மையை எளிமை என்று ஏற்று வாழ்ந்த காங்கரஸ்காரர்.

நான் அப்பாட்டையும் அம்மாட்டையும் சொல்லிட்டு அங்கிருந்து போன பிறகு சாயந்திரமா அங்க இருந்த ஒரு கம்போன்டர் அம்மாட்ட வந்து,

“உங்க வீட்டுக்காரு இறந்துடுவாருமா, இறந்துட்ட பிறகு நீ எடுத்துட்டு போறது உனக்குக் கஷ்டம், நீ வில்லேஜ் ல இருந்து வந்திருக்க, சார நான் பாக்குறேன் டீசண்டான ஆளா இருக்காரு, ஏன்னா டாக்டர்ஸ்கெல்லாம் நல்லா ஒத்துழைக்கிறாரு, பாத்துட்டே இருக்குறேன் நானு, அதனால நீ இப்பவே அவரை வீட்டுக்கு கூப்டுட்டு போயிடு.”

“நான் ஸ்டெரச்சர்ல வச்சு அனுப்புறேன், கீழ டாக்சி வண்டி நிக்குது, ரன்னிங் ல போக்கும்போதுகூட இறந்துட்டா சொல்லிடாத ஏன்னா அதிகமா வாடகை கேட்பான். உங்கிட்ட காசில்லை. ஆளா கூப்ட்டு போனா ஒரு காசு …….அதுவாயிட்டா வேற காசு கேட்பாங்க.”

தொண்டை கமறலைச் சரிசெய்துகொண்டே தொடர்ந்தார் பிரதாபன்.

நான் மிகப்பெரிய பணக்காரனாக பொறந்தேன் எங்கப்பா இறக்கும்போது மிகச்சாதாரண ஏழையாயிட்டேன். ஏன்னா எங்கப்பா வந்து கேட்டவங்களுக்கும் மக்களுக்கும் வாரி வழங்கி எல்லாத்தையும் விட்டுட்டார் அப்ப நமக்கது தெரியல.

கண்ணைத் துடைத்துக்கொண்டே, அப்ப….ம்ம்….அது அப்பிடியாச்சா …..கொஞ்சம் நினைவுகளை கூட்டிவர சில வினாடிகள் எடுத்துக்கொண்டு தொடர்ந்தார் பிரதாபன்.

அப்படி ஒருத்தன் சொன்னானா, சரின்னு கீழ இருந்த ஒரு டாக்ஸி ல ஏறிட்டு அம்மா கேக்குறாங்க

 …தோ இதான் எங்க அம்மா அப்பான்னு டாஸ்போர்டில் ஒட்டி இருந்த போட்டவை காட்டினார். அந்த போட்டோவை அமைதியாக பார்த்தாள் தேவகி.

கேக்குறாங்க அம்மா, “அப்பா எதாவது வேணுமாப்பா னு?” எங்க அப்பாவை  அப்பானுதான் கூப்டுவாங்க எங்க அம்மா

“ஏதாவது வேணுமாப்பா …?”

“புள்ளையோட ரூமை பார்த்துட்டு போலாம்”

“இல்ல அவன்தான் ஷூட்டிங் போயிட்டானே”

“சும்மா ரூமை பார்த்துட்டு போலாம்”னுஅப்பா சொல்லியிருக்கார் 

அதைச் சொல்ல மிகுந்த தடுமாற்றம் குரலில் அந்த ஏக்கம் கண்ணீராய் துளிர்த்து வெளியில் வந்ததைத் துடைத்துக் கொண்டு பேசினார் பிரதாபன்.

அங்க போனா எங்க அசோசியேட் டைரக்டர் இருந்திருக்கார்.

அம்மா, அப்பாட்ட “இங்க பாருங்க இங்கதாங்க தம்பி தங்கியிருக்குனு” சொல்லும்போது அஸோஸியேட் எட்டிப்பார்த்திருக்கார்.

“ம்ம் அவன் அவுட்டோர் போயிட்டானே னு” அவரு சாதாரணமா சொல்லியிருக்கார்.

எங்கம்மா  எதையும் வெளிகாட்டிகள

“சரிங்க வந்தா சொல்லுங்கன்னு” இவுங்க சொல்லிட்டு வந்துட்டாங்க.

ரன்னிங்ல மீனம்பாக்கம்… மீனம்பாக்கத்தை தாண்டும் போதே……அது  ….நடந்துடுச்சி.

கொஞ்ச நேரம் மௌனமா இருந்துட்டு தொடர்ந்தார் பிரதாபன்

அப்ப கம்போன்டர் சொன்னது எங்க அம்மாவுக்கு நியாபகம் வந்துடுச்சி.

அவுங்க வில்லேஜிலே இருந்து வந்தவங்க ஆயிரம் சினிமா பார்த்தாலும் தைரியம்தான் இருந்தாலும் கணவன் இறந்து மடியில கிடக்கும்போது. எப்படி இருந்திருக்கும் யோசிச்சு பாரு?

தேவகியின் அத்தனை கவனமும் பிரதாபனின் உரையாடலில் ஒன்றிப்போயிருந்தன.

அப்பாட்ட பேச்சு குடுத்திட்டே போறாங்க 210 கிலோமீட்டரும் அவரு எதோ உயிரோட இருக்கிறது மாதிரியும் இவுங்க கேள்வி கேக்கற மாதிரியும் அவுரு பதில் சொல்றமாதிரியும் கேள்வி பதில் நடந்துட்டே இருக்கு

டிரைவர் டீ கடையில நிறுத்துவான் இல்ல, 

“நீ போய் சாப்பிடுப்பா ஏங்க உங்களுக்கு வேணுமாங்க?

இல்லப்பா அவருக்கு வேணாமாம்பா நீ போய் சாப்பிடு”

இப்ப பார்த்திபன் படத்துல ஒத்த செருப்புல பார்த்ததெல்லாம் எங்க அம்மா அப்பவே நடிச்சிருக்கு.

அடிக்கடி அந்த கேள்வி பதில் உரையாடல் எப்படி இருந்திருக்கும்னு யோசித்து பாக்குறதுண்டு …நாம இலக்கியத்துல, புராணத்துல, வரலாற்றுல இப்படி எத்தனையோ உரையாடல்களை பார்த்திக்கோம், படிச்சிருக்கோம் தன் கணவரோட எத்தனையோ பயணம் போயிருப்பாங்க எங்க அம்மா, அப்ப அவர்களுக்குள் எப்படியெல்லாமோ உறையாடியிருப்பார்கள்.

 இப்ப தன் கணவரை மடியில் கிடத்தி கொண்டு அவருடன் நடந்த இந்த உரையாடலும் அந்த பயணமும் இருக்கே …..

டிரைவர் சாப்பிட நிறுத்தும் ஒவ்வொரு இடத்துலயும் அதே பதிலை சொல்லி வந்துட்டே இருந்த அம்மா  

மனலப்பாடி என்ற எங்க ஊர் போர்டு பார்த்ததும் அவ்வளவு நேரம் அடிக்கி வச்சிருந்ததை மீறி ஓ னு கத்தியிருக்காங்க.

 டிரைவர் “என்னமா ஆச்சுன்னு” திரும்பி பார்க்கவும் 

“இல்லப்பா மீனம்பாக்கத்துலயே ….போயிடுச்சிபா”

“ஏம்மா சொல்லல, நான்பாட்டுக்கு டீ சாபிட்றேன் புரோட்டா சாபிட்றேன் ஏன் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல நீ” னு டிரைவர் கேட்டிருக்கான். 

“இல்லப்பா ..இது .ம்ம் .. சொன்னா உயிரோட இருக்கிறவங்களுக்கு ஒரு கூலி உயிரில்லாதவங்களுக்கு ஒரு கூலின்னு சொன்னாங்க”

எந்த மடையன் சொன்னான்? டிரைவர் திருப்பி கேட்டுட்டு, காசே வாங்காம போயிட்ட்டார்

இல்ல இந்த மனித நேயம் எல்லாம் சாகலங்றதுக்காக சொல்றேன்.

உங்க அப்பா செய்த தான தர்மத்துக்கு அதுதான் பலன்னு நெனைக்கிறேன் சார், தேவகி சொல்ல 

ஆமாமா அது சரிதான்.

சினிமா முன்பு மாதிரி இல்ல அதுல இருந்து விலகினதும்

என்ன செய்யலாம்னு எல்லாரும் யோசனை சொன்னப்ப 

கார் ஓட்டலாம், பயணம் செய்யலாம், உரையாடலாம்னு நான் முடிவெடுத்ததுக்கு காரணம் எங்க அம்மா மடியில எங்க அப்பாவை கிடத்திட்டு செய்த அந்த பயணம், உரையாடல்.

என் அப்பா அம்மா ரெண்டுபேரும் எல்லாத்தையும் பகிர்ந்துக்கிட்டாங்க, கடைசியா அப்பாவோட மரணத்தையும் அம்மா பகிர்ந்துகிட்டாங்க. எங்க அம்மா தான் எங்களுக்கு பெரிய ஜீவா ஊற்றா இருந்தாங்க 

வாழ்க்கையே ஒரு பயணம் தான், அந்த பயணத்துல நாம சக மனிதர்களோடு நடத்துற உரையாடல் தான் நம்ம நினைவுல நிக்கும், நாம பகிர்ந்துக்குற விஷயங்கள் தான் மனசுல தங்கும் அதுலயும் அன்பை பகிர்ந்துக்கிட்டா அதைவிட வேற என்ன பெருசா செய்துட முடியும்?

பிரதாபன் சார் சொல்லி முடிக்கவும் கார் அமராவதி அணைக்கட்டு என்ற பலகையின் முன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அணைக்கட்டில் மதகு திறந்து தண்ணீர் பாய்ந்து வந்துகொண்டிருந்தது.

சிப்பி

A picture containing water, outdoor, ocean, blue

Description automatically generated

“அப்பா, கோஸ்ட் இருக்கா, இல்லையா?”

கேட்டுக்கொண்டே வந்த வெண்பாவின் தோள் மேல் அழகாக அமர்ந்திருந்தது சிப்பி.

தன் ஒரே செல்ல மகள் வெண்பா ஆசையாய் கேட்டது செல்ல நாய் அல்லது பூனை. வெண்பாவின் அம்மா கோதைக்கு நாய் என்றால் பயம். பூனை வீட்டுக்கு வெளியில் இருக்க வேண்டிய பிராணி என்று நினைப்பவள். விலங்கு, பறவை எதுவானாலும் கூண்டில் அடைத்து வீட்டில் வைப்பதில் கோதைக்கு ஒப்புதல் இல்லை. இருந்தாலும் மகளுக்காக பறவை வளர்க்க ஒத்துக்கொண்டாள். செல்வன் மகளைச் சமாதான படுத்த காக்கடீல்  பறவையை நேரில் காட்டி சம்மதிக்க வைத்து வீட்டிற்கு வாங்கி வந்திருந்தான். வெண்பாவே அதற்குச் சிப்பி என்று பெயர்சூட்டி மூன்று மாதங்கள் ஆகின்றது.

“ஏம்மா இன்னைக்கு எதாவது கனவு கண்டியா?” வாட்சாப்பிலிரிந்து கண்ணை எடுக்காமல் கேட்டான் செல்வன்.

 “இல்லப்பா இந்த வீட்ல எல்லா அறையிலும் நல்லா சமத்தா இருக்கிற சிப்பி, நீங்க க்ரீன் ஸ்க்ரீன் போட்டு வைத்திருக்கிற அறையில் நுழைந்தால் மட்டும் பயத்தில் நிறையப் பட படன்னு இறக்கையை அடிக்கிறான்.”

 “அதுக்கும் கோஸ்ட்டுக்கும் என்ன தொடர்புமா?” இன்னும் செல்வனின் கையும் கண்ணும் அலைப்பேசியிலிருந்தன.

 “நாய், பூனை, பறவைக்கெல்லாம் கோஸ்ட் இருந்தால் தெரிஞ்சிடும்னு நீங்களும் அம்மாவும் சிகாகோ பெரியப்பாவுடன் பேசிட்டிருந்ததை கேட்டிருக்கிறேன்”. சொல்லிக்கொண்டே வந்து சிப்பியைச் செல்வனின் தோளில் இடம் மாற்றினாள் வெண்பா.

வெண்பா சின்ன வயதிலிருந்து ஒரு முறை எதையாவது காதில் கேட்டால் கோவைப்பழச்செடியை வைத்து கரும்பலகையை அழித்தாலும் அழியாத சொற்கள் போல ஞாபகத்தில் பதித்துக்கொள்வாள். அதனாலே கோதையும் செல்வனும் வெண்பாவிற்கு முன்னால் பல விஷயங்களைப் பேசுவதில்லை.

சிப்பி செல்வனின் கழுத்திலிருந்த சங்கிலியை தன் சின்னஞ்சிறிய அலகால் கொத்திக் கொண்டிருந்தது.

சிப்பி, காக்கடீல் பறவை, மிகவும் பிரபலமான மெல்லிய ஆஸ்திரேலிய கிளி, குட்டியாகவும் தைரியமாகவும் இருக்கும். அதன் இறக்கைகளின் சிலிர்ப்புகள் மற்றும் சீட்டிகளின் சத்தம் நம் DNAவில் உள்ள ஆதி மனிதனைத் தட்டி எழுப்பும். பெண் காக்கடீல்ஐ விட ஆண் காக்டீல் பல விதமாக விசில் சத்தம் எழுப்பும். சிப்பியின் விசில் சத்தம் காலையில் மங்கள இசையாகிவிட்டது, வெண்பா பெரும்பாலும் சிப்பியின் இசை கேட்டுத்தான் எழுவாள். எப்போதும் வெண்பாவின் தோளிலோ அல்லது செல்வனின் தோளிலோ வாசம் செய்யும் சிப்பி. 

தம்பி தங்கை இல்லாத வெண்பாவிற்குச் சிப்பி தான் சகோதரன். சிப்பி வந்த நாளிலிருந்து அதன் கூண்டைச் சுத்தம் செய்வது, தண்ணீர், உணவு வைப்பது, அது எங்கு அசுத்தம் செய்தலும் உடனே துடைத்து விட்டுச்  சிப்பியிடமிருந்து சற்று தள்ளியே இருந்த கோதை இப்பொழுதுதான் நெருங்கிப் பழக ஆரம்பித்திருக்கிறாள்.

 “சரி அந்த அறையில் கோஸ்ட் இருக்கிறதால்தான் சிப்பி இறக்கையை வழக்கத்துக்கு அதிகமா  அடிக்கிறான்னு நினைக்கிறியா?”

வெண்பா தன் இடது  உள்ளங்கையை நீட்டச் சிப்பி தத்தி தத்தி தாவி உட்கார்ந்துகொண்டது, அதை வலது  கையால் பொத்தி இரண்டு விரல்களால் நீவி விட்டுக்கொண்டே செல்வனிடம் 

“இப்ப பாரேன் இந்த அறையில் எப்பிடி அமைதியா, மகிழ்ச்சியா இருக்கிறான், ஆனா அந்த அறைக்கு போனா மட்டும் பட படக்குறான்”

“அது கோஸ்ட் செய்ற வேலைன்னு சொல்றியா?”

“ அப்பா, நான்தான் கேள்வி கேட்டேன், நீங்கப் பதில் சொல்லாமல் என்னைத் திருப்பி கேக்குறீங்க?”

செல்வனிடம் இருந்து பதில் வராததால், “அப்பா நான் பேசிட்டு இருக்கேன் நீங்க கைபேசியையே பாத்துட்டு இருக்கீங்க? அம்……மா அப்பா வாட்சாப் பாத்திட்டு இருக்கார் “னு கூடத்திலிருந்த கோதைக்கு கேக்கற அளவுக்குக் கத்தி சொல்லிவிட்டு அப்பாவைப் பார்த்து மாட்டி விட்டுடேனே என்று முகத்தை ஆட்டி காட்டினாள்.

 வெண்பாவின் குரலுக்குக் கட்டுப்பட்டவனாகச் சற்றென்று வாட்சாப்பிலிருந்து விடுபட்டு, 

 “இல்லமா, கோஸ்ட்  இருக்கா, இல்லையா? இது  கடினமான கேள்வி, இருக்கு, இல்லனு உடனே பதில் சொல்ல முடியாதுமா.”

 “நீங்க நிறைய படிக்கிறீங்க, தினமும் பல ஜூம் கூட்டத்தில்ல கலந்துக்கிறீங்க, சின்ன வயசிலேயே பலருக்குக் கிடைக்காத உலக அனுபவங்களைக் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கார்னு சொல்லியிருக்கீங்க இதுக்கு பதில் சொல்ல முடியாதா? “

இந்த எதிர்க் கேள்வியை எதிர்பார்க்காத செல்வனுக்கு, நாம எப்பாவோ வாழ்க்கையை கத்துக்கொடுக்கணும் என்று நினைத்து தன் அனுபவங்களை மகளிடம் பகிர்ந்துகொண்ட போது  ஏதேதோ பெருமை பீற்றிக்கொண்டது இப்ப நமக்கே கேள்வியா வந்து நிக்குதுனு உரைத்தது.

“சரிம்மா, நான் பதில் சொல்ல முயல்கிறேன். ஆனால் உனக்கு புரியுமானு தெரியலயே.”

 “என் மூளைக்குப் புரிகிற மாதிரி சொல்லுங்க.”

“சரி. இங்க வா இப்படி உட்கார்” என்று வெண்பாவை தன் அருகில் அமரச்சொல்ல,  

“நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றேன் அதுக்கு முன்னாடி, நீ யாருக்கு செல்லம்?”  

“சிப்பித்தான் என் செல்லம்” என்ற மின்னல் வேகத்தில் பதில் சொன்னாள். 

வெண்பாவின் கன்னங்களை தன் இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு,  “எனக்கு சிப்பி நீ தான்மா” என்று செல்வன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிப்பி அவன் தோளிலிருந்து இறங்கி அப்பாவிற்கும் பொண்ணுக்கும் இடையில் வந்து, செல்வன் அணிந்திருந்த கால்சட்டை நாடாவைக் கடித்துக் கொண்டிருந்தது. 

A picture containing colorful, parrot, drawing, bird

Description automatically generated

வெண்பாவின் தலையை கோதிக்கொண்டே யோசித்தான்.  சின்ன வயசிலிருந்து வெண்பாவிடம் யாரவது அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என்று கேட்டால், இரண்டு பேருமே என்று தாமதிக்காமல் பதில் வரும்.  வளர வளர தன்னிடமே அதிகம் பிரியமும் ஒட்டுதலும் இருப்பதை நினைத்து ஒரு பக்கம் மகிழ்ந்தாலும், தாயில்லாமல் வளர்ந்த செல்வனுக்கு, கோதையும் வெண்பாவும் இன்னும் அதிக பிரியத்துடன் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சிந்தனை வயப்படுவான்.

தலையிலிருந்து கையை எடுத்து விட்டுக் கொண்டே “ப்பா …”  கண்களால் புருவத்தை உயர்த்தி என் கேள்விக்குப் பதில் இன்னும் வரல என்று சைகையில் கேட்டாள்.

“கோஸ்ட்க்கு உருவம் இல்லை, அதனால் நமக்கு அது இருக்கா இல்லையான்னு தெரியலை, கோஸ்ட் பத்தி ஏகப்பட்ட பேர் கதை சொல்லியிருக்கிறார்கள்.”

 “கடவுளுக்கு கூட உருவம் இல்லை ஆனா கடவுள் இருக்கார்ன்னு சொல்லியிருக்கீங்க,  கடவுளையும் யாரும் பார்த்ததில்லை அதேமாதிரி கோஸ்ட்ஐயும் யாரும் பார்த்ததில்லை, இருக்குன்னு நம்பலாம்.   அப்படித்தானேபா?”

“ஓ ஸ்மார்ட்டி பான்ட்ஸ் பேசுது?” என்ற செல்வனின் கிண்டலை கண்டுகொள்ளாமல் “பதில் சொல்லுங்கப்பா?” என்றால் வெண்பா.

கிரேக்க மெய்யியல் ஆசிரியர் பிளாட்டோ கோஸ்ட் இருக்குன்னு திடமா நம்பினார்.”

 “மெய்யியல் னா?” 

  “பிலாசபி மா”

   “ஓ …”

“பிளாட்டோ சொல்றாரு, அடிப்படையில் நாம் அனைவரும் அழிவில்லாத ஆன்மாக்கள், இந்த ஆன்மாக்களுக்குச் சொந்தமான இடம் என்பது உடலுக்கும் உலகத்துக்கும் அப்பாற்பட்ட கண்ணுக்குப் புலப்படாத உலகம் தான். அங்குதான் அவைகள் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உடல் மேலுள்ள பற்றாலும் உலகத்தின் இனபங்களாலும் ஈர்க்கப்பட்டு நிறைவேறாத ஆசைகளால் அதிலிருந்து விடுபட முடியாத உடலற்ற ஆன்மாக்கள் தான் கோஸ்ட். அவைகள் தங்களுக்குச் சொந்தமான கண்ணுக்குப் புலப்படாத இடத்திற்குத் திரும்பாமல் நாம் வாழும் உலகிலே தங்கி விடுகின்றன.”

“என்னப்பா கோஸ்ட் பத்தி சொல்ல சொன்னா, நீ பிளாட்டோ சொன்னார்னு எதையெதையோ சொல்லிட்டு இருக்க?”

எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம்  (மேல்நிலைப் பள்ளி) வகுப்பிற்குள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நுழைந்த வெண்பாவிற்கு இது எந்தளவு புரியுமென்று யோசித்து முடிக்கும் முன்பே  எதிர்க் கேள்வி வந்தது.

 “உடலற்ற ஆன்மா இருக்கில்ல அதுதான் கோஸ்ட்,  அது எதன் மீது அதிகம் பற்று வைக்கிறதோ அந்த பொருளின் மீது அதிகம் வெளிப்படும். நம் உடல் மீது பற்று அதிகம் இருந்தால் மனிதர்கள் மீது வெளிப்படும்.”

“கோகோ (coco) படத்தில் வருமே அதுமாதிரி சொல்றியா?”

 “கிட்டத் தட்ட அது மாதிரிதான் “

 “சரிப்பா, கோஸ்ட் நல்லதா? கெட்டதா?”

“செல்லக்குட்டி நம்மிடம் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கில்ல அது மாதிரிதான்”

“அப்படினா கடவுள் கிட்ட வெறும் நல்லது மட்டும் தான் இருக்கா? அதனால தான் கடவுளை வணங்குறோம் , கோஸ்டை வணங்குறதில்லையா?”

விடலை பருவத்துக்கே உரியத் தர்க்கத்தின் வெளிப்பாடாக வந்து  விழுந்த கேள்வியில் செல்வன் திக்குமுக்காடினான், அதே சமயம் அந்த கேள்வியின் லாஜிக்கை ரசித்தான்.

“அதாவதுமா, உலக மாயைகளிலிருந்து விட்டு விடுதலையாகி இருப்பது கடவுள் தன்மை.  உடலைச் சார்ந்த உணர்ச்சிகளுக்கும், உலக இன்பங்களுக்கும் அடிமையாகி விடுவது கோஸ்ட் தன்மை. ம்ம் இப்டி சொல்றேன் நம்மகிட்ட இருக்குற நல்ல குணங்கள் கடவுள் தன்மை, கெட்ட குணங்கள் எல்லாம் கோஸ்ட் தன்மை.”

“கடவுள் தன்மைனா, இந்தியன் கடவுளா? அமெரிக்கன் கடவுளா?” சிப்பியின் மூக்கில் முத்தமிட்டுக் கொஞ்சிக்கொண்டே கேட்டாள்.

அந்த கேள்வியில் அர்த்தமில்லாமல் இல்லை, காரணம் செல்வன் மதத்தால் கிருத்துவன், வெண்பாவின் அம்மா இந்து. இந்தியாவிலிருந்து கல்யாணம் முடித்த கையோடு கோதையுடன் அட்லாண்டாவில் குடியேறியதிலிருந்து வீட்டில் இரு கடவுளர்களின் படங்களும் இருக்கிறது. கோயிலுக்கும் தேவாலயத்துக்கும் செல்வதால் வெண்பா எப்போதும் இந்தியன் காட், அமெரிக்கன் காட் என்றே விளிப்பாள்.

“இப்ப உன்னிடமும் நல்ல குணம் இருக்கு என்னிடமும் நல்ல குணம் இருக்கு. அதேமாதிரி  எல்லா நல்ல குணங்களும் எல்லா கடவுளையும் குறிக்கும் செல்லம்.”

 “இரண்டு கடவுள் மட்டுமல்ல உலகில் இருக்குற எல்லா கடவுகளுக்கும் உள்ள தன்மை என்னென்னா அன்பு, நன்றி, கருணை, இரக்கம், பாசம்,”

“அப்ப  அதே போல கோஸ்டுக்கு இந்தியன் கோஸ்ட், அமெரிக்கன் கோஸ்ட் னு  பிரிவு இல்லை, எல்லா கோஸ்ட்டுக்கும் ஒரே தன்மைதான் இல்லையா?”

“அப்படியெல்லாம் பிரிவு இல்ல எல்லாம் ஒரே வகை தான். பேராசை, கோபம், களவு, பொய் இதெல்லாம் கோஸ்ட் தன்மை.”

“நீங்க சொல்ற கடவுள் தன்மை மாதிரியே எங்கள் தமிழ் பள்ளியில ஒரு திருக்குறள் சொன்னாங்க, அது வந்து ஏதோ தெய்வத்துள் வைக்கப்படும் ….அப்படி வரும்பா” சிப்பி வெண்பாவின் தலையில் வட்டம் போட்டுக்கொண்டிருந்தது.

வெண்பா வார இறுதியில் நடக்கும் தமிழ்ப் பள்ளியில் இறுதி ஆண்டு முடித்து ஒரு வருடம் தான் ஆகிறது. மகள்  பிறப்பதற்கு முன்பு, பெண் குழந்தை என்று மருத்துவர் உறுதிப் படுத்தியதும், என்ன பெயர் வைக்கலாம் என்று செல்வனும், கோதையும் பேசியபோது இருவரும் மனம் ஒத்து எடுத்த ஒரே முடிவு வெண்பா என்ற பெயர் தான், அதுவும் சில நிமிடங்களில் முடிவு செய்தனர்.

“செல்லம் தமிழ்ப் பள்ளி செய்முறை பயிற்சிக்கு நீ எழுதினியே அந்த குறள் தானே, வையத்துள் வாழ்வாங்கு……. ஞாபகம் வருதா?” வெண்பா உதட்டைப் பிதுக்கினாள் 

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.” 

“அதே தான்பா, அப்பா அதென்ன மெய்யி… பிலாசபி, கடவுள், கோஸ்ட் இப்படி நிறைய தெரிந்து வச்சிருக்கியே இதெல்லாம் யாரு உனக்குச் சொல்லி கொடுத்தா?” 

“தாத்தா, பெரியப்பா, என் ஆசிரியர்கள், புத்தகங்கள் இப்படிப் பல  பேரு சொல்லிக்கொடுத்தது, தமிழல் இருக்குற மெய்யியல் இதைத்தான்மா சொல்லுது. அதாவது பிலாசபி”

 “மதியம் சாப்பிட்டத்திலிருந்து அப்பாவும் மகளும் கத அடிக்கிறீங்க, எப்ப பாரு பேய், பாம்பு, சிங்கம், புலி, காடு இப்படி பயப்படர மாதிரியே பேசுங்க, கெளம்புங்க அனுஷா பிறந்தநாள் பார்ட்டி க்கு ரொம்ப தாமதமா போக முடியாது”. இரண்டு பேரையும் கிளப்பி விட்டாள் கோதை.

 “வெண்பா சீக்கிரம் குளிச்சிட்டு சிப்பியைச் சின்ன பயண கூண்டுல போட்டுக் கிளம்பு, அப்புறம் உன்னால தான் தாமதமா ஆயிடுச்சினு உன் தோழி அனுஷாட்ட சொல்லிவிடுவேன்.”

“சரிம்மா நான் கிளம்புறேன்,”என்ற வெண்பா “அப்பா இந்தாங்க சிப்பியை பிடிங்க”னு சொல்லிவிட்டு தன் அறைக்கு ஓடினாள். சிப்பி செல்வனின் சட்டை காலரைக் கொத்த ஆரம்பித்தது.

A bird in a person's hands

Description automatically generated with medium confidence

அனுஷாவிற்கு இது 14வது பிறந்த நாள். அனுஷாவும் வெண்பாவும் முதல் வகுப்பு முதல் ஒன்றாக அதே மாவட்ட பள்ளியில்(school district) படித்து வருகின்றனர். அனுஷாவின் அப்பா, அம்மா  மலையாளிகள்.  செல்வனும் அனுஷாவின் அப்பாவும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிகின்றனர் அதன் மூலம் இரண்டு குடும்பங்களும் நெருக்கமாயின.

வழக்கம் போல என்ன உடை அணியறது என்பதில் கோதைக்கும் வெண்பாவிற்கும் வாத பிரதி வாதங்கள் முடிந்து அந்த வழக்கு செல்வனிடம் கொண்டு வரப்பட்டு ஆளும் கட்சிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வருவது போல, வெண்பாவின் பக்கமே செல்வன் தீர்ப்பு வழங்கியதில் எதிர்த் தரப்பிடமிருந்த கடும் நெருக்கடியைச் சந்திக்கவேண்டி இருந்தது. பயணம் செய்யும் போது காரில் எடுத்து செல்வதற்க்காக வாங்கிய சிறிய கூண்டு போன்ற பையில் சிப்பியை அனுப்புவதற்கு ஏற்கனவே இணையத்தில் பார்த்திருந்த காணொளியில் சொன்னது போல முயன்று சிறிது போராட்டத்திற்குப் பிறகு வெற்றிபெற்ற மகிழ்ச்சியில்  காரில் ஏறிய வெண்பா  அமர்ந்ததும் “அப்பா சிப்பி பாட்டு போடுங்க” என்று கட்டளையிட்டாள். இப்பெல்லாம் சிப்பியைச் சுத்தியே எல்லாமே நடக்க வேண்டியிருக்கு என்ற எண்ணம் கோதையின் முகத்தில் வெளிப்பட்டது. காக்டீல் பறவைகளின் விசில் சத்தத்தை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து வைத்திருந்தாள் வெண்பா அதைத்தான் சிப்பி பாட்டு. காரில் செல்லும் பொழுது அனுஷாவின் செல்ல நாய்க்குட்டி பற்றியும், சிப்பியைப் பார்ப்பதற்கு அனுஷா எவ்வளவு ஆவலாய் இருக்கிறாள் என்பதை அனுஷாவின் வீட்டை நெருங்கும் வரை விவரித்துக் கொண்டு வந்தாள்.

பிறந்த நாள் பார்ட்டி அனுஷாவின் வீட்டில், நெருங்கிய சில நண்பர்களின் குடும்பம் மட்டும் வந்திருந்தன. அனுஷாவின் அப்பா கிட்டார் வாசிக்கச் செல்வன் பாட, அதன் பிறகு கரோக்கியில் ஒவ்வொருவராகப் பாட, கையில் மதுவும், காதுகளில் இசையும் நிரம்பி வழிந்தது. 

Sketch Walking Indian Family Hand Drawn Stock Vector (Royalty Free)  395171143

அனுஷாவிற்கு தன் பிறந்தநாளை விட  வெண்பா கொண்டு வந்திருந்த சிப்பியைத் தூக்குவதும் கொஞ்சுவதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அனுஷாவின் நாய்க் குட்டிமேல் எப்படி சிப்பியை உட்கார வைத்து காணொளி எடுப்பது, அதற்கு எப்படி பயிற்சி கொடுப்பது என்று தீவிர விவாதத்திலிருந்தனர் வெண்பாவும் அனுஷாவும்.

 மணி இரவு 11ஐ நெருங்கிக்கொண்டிருந்தது, கோதை “கிளம்பலாம் நீங்க அதிகம் குடிச்சிடீங்க, கார் நீங்க தான் ஓட்டனும், வீணா பிரச்சனை ஆயிடும் போதும்”என்று காதை கடித்து விட்டுப் போனாள். 

எல்லோரும் சென்றுவிடச் செல்வனும் அனுஷாவின் அப்பாவும் கையில் மதுவுடன் இளைய நிலாவைப் பொழிந்து கொண்டிருந்தனர். கோதை அனுஷாவின் அம்மாவிற்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்து உதவி செய்துகொண்டிருந்தாள்.

“அப்பா நான் இன்னைக்கு அனுஷா கூட ஸ்லீப் ஓவர் பண்ணவா” என்று கேட்க, “அம்மாட்ட கேளுமா “என்று சொல்லிவிட்டுப் பாடலில் மூழ்கினான். 

“இங்க பாரு வெண்பா அடுத்த வாரம் நீண்ட வார விடுமுறை வருது அப்ப இரண்டு பேரும் ஸ்லீப் ஓவர் பண்ணலாம், சிப்பி புது எடத்துல தூங்கமாட்டான், உன் அறையிலே தூங்கி பழகிட்டான, அவனுக்குப் பயமா இருக்கும்”னு கோதை சொன்னதும் வெண்பாவுக்கு அது சரி என்று பட்டது ஆனால் அனுஷாகூட ஸ்லீப் ஓவர் பண்ணவும் ஆசை.  சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தளர்வாக உடலையும் தோள் பட்டையையும் வைத்துக்கொண்டு நடந்தாள்.

 அனுஷா அப்பா, செல்வனிடம், “சரி கோதைக்கு இன்னும் கோவம் அதிகமாவதற்குள் நீங்க கிளம்புங்க” என்று சொல்லவும் கோதை செல்வனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “சரி மா நாம கிளம்பலாம்” என்று எழுந்தான் செல்வன். 

மூவரும் விடை பெற்றவுடன் காரை இயக்கினான் செல்வன்.

கார் சிறிது தூரம் சென்று நெடுஞ்சாலையைத் தொடுவதற்குள் கோதை படபடக்க ஆரம்பித்தாள்,

“எத்தனை முறை சொல்வது இரவு நேரமான பின்பு குடித்துவிட்டு வண்டி ஓட்ட வேணாம்னு. இனிமே எங்களை கூட்டிட்டு வரதா இருந்தா இப்படியெல்லாம் வந்தா நான் எங்கயும் வரமாட்டேன்.”

“சரி கொஞ்சம் அமைதியா வா நான் நிதானமாகத்தான் இருக்கேன்” என்றான் செல்வன்.       

“ஆமா உங்க நிதானம் எங்களுக்குத் தெரியாதா, குடிக்கிறவங்க யாரு தான் நான் போதையில இருக்கேன்னு ஒத்துக்குவாங்க.”

கோதையின் குரலிலிருந்த வெப்பம் செல்வனின் கோபத்தைக் கிளப்பி விட்டது. 

“அப்படினா நீ கார் ஓட்ட கத்துக்க வேண்டியதுதானே, அதை செஞ்சிருந்தா ஒரு பிரச்சினையும் இருக்காதில்ல” என்று குரலை உயர்த்தினான். அவ்வளவுதான், கோதையின் குரல் வெடிக்க ஆரம்பித்தது, 

“நீங்க குடிச்சிட்டு வண்டி ஓட்டாதீங்கன்னு சொன்னா நான் சரியில்லனு அதுக்கும் என்னைத்தான் குற்றம் சொல்லுவீங்களா? “என்று ஆரம்பித்து ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த கோபத்தையெல்லாம் வார்த்தைகளில் கொட்டினாள்.

 செல்வனின் கோபம் காலில் வெளிப்பட்டு காரின் வேகம் நெடுஞ்சாலையில் குறிப்பிடப் பட்டிருந்ததைவிட அதிவேகமாகச் செல்ல ஆரம்பித்தது,  இதை உணர்ந்த கோதை  “இப்படியே வேகமாய்  போய் எங்கேயாவது மோதுங்க அப்படியே எல்லாரும் போய் சேர்ந்தரலாம் “ என்று சொல்லி முடிப்பதற்குள் செல்வன் நிதானம் இழந்து ஆங்கிலத்தில் கத்த, பின் இருக்கையில்  சிறிய பயண கூண்டில் இருந்த சிப்பி படபடப்பதை ஆசுவாசப்படுத்த முயன்ற வெண்பா,         

“அப்பா தயவுசெய்து கத்தாதீர்கள், சிப்பி பயப்படறான், கார் உள்ளேயும் கோஸ்ட் வந்துடுச்சி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே 

அவர்களின் காருக்குப் பின்னால் காவல்துறை வண்டி சுழலும் சிகப்பு விளக்கை எரியவிட்டு, சைரனை அலறவிட்டது, அதை கார் கண்ணாடியில் பார்த்த செல்வன் பதட்டத்துடன் வேகத்தை வெகுவாக குறைத்து நெடுஞ்சாலையின் வலது ஓரமாய் காரை நிறுத்தினான். காவலர் இவர்கள் காரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வெண்பாவின் கண்களில் நீர் கோர்த்துத் திரண்டிருந்தது. 

இதுவரை வெண்பாவின் சிப்பிக்கு மட்டுமே புலப்பட்ட கோஸ்ட் தன்னோட சிப்பியின் கண்களுக்கும் தெரிவதை உணர்ந்த செல்வன் “அப்பாவை மன்னிச்சிக்கோ மா” என்று தன் கண்ணைத் துடைத்துக் கொண்டே திரும்பி வெண்பாவை பார்த்துச் சொன்னான். 

சிப்பி படபடப்பு குறைந்து அமைதியானது.

முதல் முத்தம்

குழந்தையாய்

கொடுத்ததும்  பெற்றதும் 

நினைவில் இல்லை 

புன்னகை மன்னனின் 

முகம் கொள்ளா  முத்தம் பார்த்து 

அன்று கமல் ஹாசனுக்கு 

இன்று 

கண்டேன் காதலை பரத் வரை  

என் ஈர இதழ்கள் பந்திந்த

எல்லா (வார) இதழ்களும்

அடுப்பெரிக்கவும்  பயன்படாத

ஈரத்தில் தோய்ந்து கிடக்கின்றன

அறியப்படாமலும்

அனுபவிக்கப்படாமலும்

வறண்ட  இதழோரம்

காத்திருக்கிறது

என் முதல் முத்தம்

முள் குத்தும் கன்னத்திற்காக

விருப்பம்

காதலில்

புது கவிதையாய் இருந்தவள்

கல்யாணத்தில்

மரபு கவிதையாகிவிட்டேன்

என்கிறாய்

இரண்டையும் எழுதியவன்

நீதானே

அதற்குத்தான்

அன்றே சொன்னேன்

புது கவிதை

யார் வேண்டுமானாலும் எழுதலாம்

மரபு கவிதை இலக்கணம்

அறிந்தவர்களுக்கு மட்டும்

நீதான் எழுதினாய்

ஒரு  வரி கவிதை ..

இரு கால் பூ …

உலா வரும் பூந்த்தொட்டி …

உன் பெயரை சூட்டும்  வரை

அதனை நிலா என்று அழைப்பதில்லை …

இப்படி பல …

நீ கவிஞனானால்

நான் கவிதையாக வேண்டும்

நீ கணவனானால்

நான் காப்பி கலக்கவேண்டும்

நீ சிற்பியானால்

நான் சிலையாக வேண்டும்

இப்படி எல்லாமுமாக

நான் ஆக வேண்டும்

உன் விருப்பபடி

இங்கே எது நடக்கும்

என் விருப்பபடி

நானே நடக்காதபோது

மழை

வருந்தி அழைத்தாலும் வராது

தானாக வரும் காதல் போல

    ——- 

எத்தனை முறை பெய்தாலும்

அடுத்தமுறை எப்போது

ஏக்கத்தில் மனது

——–

மழை எழுதிப்பார்த்ததில்

நனைந்து போனது இதயம்

——

குடை பிடித்து தடுத்தாலும்

தடை தவிர்த்து பாதம் தொடும்

——-

மழை இசை

மழை இரைச்சல்

மழை இம்சை

மழை இயக்கம்

——–

மழைக்காக காத்திருந்த மனசு

வந்தவுடன் கேட்க்கும் மழை நின்னாச்சா

——-

வராத போது மழை பிடிக்கும் மனசுக்கு

வந்தவுடன் குடை பிடித்துவிடும்

——-

கறுப்பு கொடி காட்டினாலும்

கம் என்று பெய்துவிடும்

——–

கவிஞனுக்கு மழை கூடல்

சிறுவனுக்கு அது கடல்

——-

நின்ற பின்னும்

பெய்துகொண்டே ……இருக்கும்

மனதில்

——

உழவு நிலத்தில் விளைச்சலானது

பரிணாம வளர்ச்சியில் அரசியலானது

தினமும்

இவன் மனம் சிகரெட் புகை போல் சந்தேகத்தால் கசிய தொடங்கிய அதே வேளையில் அவள் அவனுடன் காரில் ….

…………………..

வாங்க நீங்களும் சேர்ந்து எழுதலாம் இல்லை முடிக்கலாம்

முன்பிருந்த நான்

என் எண்ணங்களில்
நீ இல்லை
வண்ண கனவுகளில்
நீ இல்லை
உள்ளத்தில் இல்லை
உணர்வுகளில் இல்லை
காரணம்
நானே நீயாகியிருப்பதால்
ஆத்மா ஒன்றுதான் என்றாலும்
முன்பு நான் ஆணாக இருந்தேன்
இப்பொழுது பெண்ணாகியுள்ளேன்
எனக்கு இப்பொழுது
ஒரு கவலை
முன்பிருந்த என்னைவிட
இப்பொழுதுள்ள என்னை
கொஞ்சம் better ஆக
உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான்

போறாளே போறாளே ………

நான் எழுதி இசை கோர்ப்பு செய்த‌ பாட‌ல்க‌ள் இங்கு இட‌ம் பெறும் ……….

போறாளே போறாளே ………

போறாளே போறாளே ………

போறாளே போறாளே என்னை விட்டு போறாளே
க‌ண்ணில் காத‌ல் தீயை மூட்டி போறாளே
அவ‌ள் விண்ணோடு மின்ன‌லா பூவோடு தென்ற‌லா
நெஞ்சோடு காத‌லாய் ஆடும் ஊஞ்ச‌லா
நான் கொஞ்சாத கொஞ்ச‌லா கெஞ்சாத‌ கெஞ்சலா
கொல்லாம‌ல் கொல்லுதே சின்ன‌ வெண்ணிலா

போறாளே போறாளே என்னை விட்டு போறாளே
க‌ண்ணில் காத‌ல் தீயை மூட்டி போறாளே
                (1)

ர‌த்த‌ம் ச்சொட்ட‌ ச்சொட்ட‌ என் க‌ண்ணீரெல்லாம் கொட்ட‌
தேகம் எங்கும் சுட்ட க‌ருந்தீயாய் போறாளே
காத‌ல் த‌ந்துவிட்டு என் நெஞ்சை கொன்றுவிட்டு
வ‌ட்டிக்கார‌ன்போலே எனை வாரிச்சென்றாளே
அவ‌ள் விண்ணோடு மின்ன‌லா பூவோடு தென்ற‌லா
நெஞ்சோடு காத‌லாய் ஆடும் ஊஞ்ச‌லா
நான் கொஞ்சாத கொஞ்ச‌லா கெஞ்சாத‌ கெஞ்சலா
கொல்லாம‌ல் கொல்லுதே சின்ன‌ வெண்ணிலா

              (2)
ஓரவிழி பார்வ‌ என் விலாவெல்லாம் நோக‌
நெஞ்சுகூட்டில் என்னை கிள்ளிச்சென்றாளே
போகும் பாதை பார்த்து நான் காத்திருந்தேன் நேத்து
ஆயுள் எல்லாம் சேர்த்து அவ‌ள் அள்ளிச்சென்றாளே
நான் கொஞ்சாத கொஞ்ச‌லா கெஞ்சாத‌ கெஞ்சலா
கொல்லாம‌ல் கொல்லுதே சின்ன‌ வெண்ணிலா
அவ‌ள் விண்ணோடு மின்ன‌லா பூவோடு தென்ற‌லா
நெஞ்சோடு காத‌லாய் ஆடும் ஊஞ்ச‌லா

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑