கல்லறை திருநாளுக்கு அடுத்த நாள் எல்லாக் கல்லறையிலும் நேற்று ஏற்றி எரிந்து முடிந்த மெழுகின் ஒத்தடம், காய்ந்தும் காயாமலும் மலர்கள், அதிகம் சாமந்தி மலர்கள் ரோஜா மாலைகளின் வாசம் கலந்து கட்டி மூக்கை தொட்டன. வழக்கமாக யாரும் கவனிக்கப்படாத நாட்களில் கல்லறை தோட்டத்தில் நிலவும் அமைதியும் சூழலும் இன்றி கொஞ்சம் பயமற்ற மனநிலையை தந்தது இன்று.
தன் நைனாவின் கலரைக்கு அருகில் தான் கொண்டு வந்த சிறிய கேம்ப் சேர் போட்டு அமர்ந்து கொண்டான் நாதன், தோள்பட்டையில் தொங்குகின்ற சிறிய எக்ஸிக்யூட்டிவ் பையில் இருந்து பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். “இறை இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள நாதனுக்கு என்று தொடங்கிய அந்த கடிதம் 2000 ஆம் ஆண்டு நாதனின் 25 வது பிறந்தநாளுக்கு நைனா எழுதி இருந்த கடிதம். கடிதத்தை சத்தமாக வாசித்தான. வழக்கமா வீட்டின் மாடியில் பக்கத்தில் நாற்காலி போட்டு அவருடன் அமர்ந்து பேசுவது போல பேசத் தொடங்கினான். யாருமற்ற அந்த கல்லறை தோட்டத்தில் அவன் குரல் நன்றாக கேட்டது அப்போதுதான் கவனித்தான் தோட்டத்தின் மூலையில் ஒரு தாயும் சிறுவன் ஒருவனும் ஒரு கல்லறையின் முன்பு அமர்ந்து கொண்டு விசும்பிக் கொண்டிருப்பதை. விசும்பலை கேட்டு இவன் அவர்களைப் பார்ப்பதற்கும், அவர்கள் இவன் குரல் கேட்டு இவனைப் பார்த்ததும் ஒரு சேர நடந்தது. அவர்கள் பார்த்ததும் இவன் குரலை சற்று தாழ்த்திக் கொண்டான், விசும்பலின் சத்தம் குறைந்தும் கூடிக் கொண்டும் இருந்தது இவன் மீண்டும் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தான். அந்தக் கல்லறையின் தலைமாட்டில் சிலுவையில் சிறகுகளை விரித்த வகையில் கட்டப்பட்டு மேலே ஒரு பெரிய வழு வழுப்பான கல்லால் மூடப்பட்டிருந்தது. அதில் நைனாவின் பெயர் தோற்றம் மறைவு மற்றும் அம்மாவின் பெயர் தோற்றம் மறைவு எழுதியிருந்தது. அது அம்மாவின் கல்லறை அதே கல்லறையில் தான் நைனாவையும் வைத்திருந்தார்கள். அது அம்மா நைனா இருவரின் கல்லறை என்றாலும் நாதனின் நினைவில் என்றும் நைனா தான் இருந்தார் ஆறு வயதில் அம்மாவை இழந்து அக்காக்களாலும் அண்ணன்களாலும் நைனா வாளும் வளர்க்கப்பட்ட நாதனுக்கு அம்மா பற்றி வெகு சொற்பமான நினைவுகளே இருந்தன. நாதன் சிறுவனாக இருந்த பொழுது கல்லறை திருநாளில் இந்த கல்லறைத் தோட்டத்திற்கு வரவே மாட்டார். அண்ணன் அக்காவுடன் தான் அம்மாவின் கல்லறைக்கு வந்தது ஞாபகம் இருந்தது நாதனுக்கு.
அப்போதெல்லாம் கல்லறைத்திரு நாளுக்கு முந்தைய நாள் சிறிய மண் மேடாக இருக்கும் அம்மாவின் கல்லறையை, மண் கொட்டி சரி செய்து செவ்வக வடிவில் மண்ணாலும் சாணந்தாலும் மொழுகிவிட்டு வருவது எப்போதும் நியாபகத்தில் இருக்கும். கல்லறைத் திருநாளுக்கு ரெண்டு மூணு வாரங்களுக்கு முன்பிருந்தே நைனா கல்லறையை போய் சுத்தம் செய்யனும் என்று சின்ன அண்ணன்ட்ட பல முறை சொல்லி அதனால வீட்ல சண்டை வந்து அப்புறம் ஒரு வழியா தன்னையும், அக்காவையும், தம்பி எல்லாரையும் கூட்டிட்டு போய் எந்த கல்லறை என்று அடையாளம் காட்டி சரி செய்றது அநேகமா திருநாளுக்கு முந்தின நாளாக இருக்கும். நாதன் ஐந்தாவது ஆறாவது படிக்கின்றவரை தான் சென்று வந்ததும் அதன் பிறகு நாதனின் தம்பி அண்ணன், அக்காக்கள் மட்டுமே இதை செய்து வந்தனர் நைனா அந்த கல்லறையில் உறங்கும் வரை. அதன் பிறகு ஒரு வருடத்தில் அந்த கல்லறையை நவீன காலத்திற்கு ஏற்ப கான்கிரீட் கற்களால். வழுவழுப்பான கல்லால் கட்டி பெயர்களையும் பொரித்து விட்டதால் எப்போதும் சென்றாலும் நைனாவின் கல்லறையை அடையாளம் காண்பது சிரமம் இல்லாமல் இருந்தது
நாதனின் கைபேசி ஒலித்தது வாட்ஸ் அப் காலில் மை டார்லிங் டாட்டர் என்று பெயர் பலிச்சிட்டது எடுத்து சொல்லு செல்லம் என்றான் நாதன், “அப்பா எங்கே இருக்கீங்க” என்றால் வெண்பா “தாத்தா கல்லறையில் இருக்கேன்மா என்ற நாதன் கலிபோர்னியாவில் மனைவியையும் தன் செல்ல மகளையும் விட்டுவிட்டு இரு வார விடுமுறை எடுத்துக் கொண்டு 12 வருடங்களுக்குப் பிறகு கல்லறை திருநாளில் தன் சொந்த ஊரில் இருக்கும் வாய்ப்பு அவன் பலமுறை திட்டமிட்டு முடியாமல் போன ஒன்று. “தாத்தாக்கு நீங்க எழுதின கடிதத்தை எடுத்துட்டு போனீங்களா”, இப்பதான் தாத்தா எழுதின கடிதத்தை படிச்சேன் இனிமேதான் தாத்தாக்கு நான் எழுதின கடிதத்தை படிக்கணும்” என்றான் நாதன் “சரிப்பா நீங்க முடிச்சுட்டு கூப்பிடுங்க” என்று அழைப்பை துண்டித்தாள் வெண்பா.
தொடரும்
பின்னூட்டமொன்றை இடுக