நினைவு கடிதம்

வங்கக் கடலில் புயல் சின்னம் (கொடி) ஏற்றப்பட்டு இருந்ததை விடுதியின் மூன்றாவது மாடியின் வெளி தளத்தில் துணி காயப் போட்டிருந்த கம்பியைப் பிடித்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் வளன். கடந்த வாரம் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை அம்மா அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க வந்தார்கள். வீட்டிலிருந்து சாப்பாடு, தின்பண்டங்கள் கொண்டுவந்து ஊட்டி விட்டு பிள்ளைகளுடன் இரண்டு மணிநேரம் இருந்து கொஞ்சி, கெஞ்சி விட்டுப் போனார்கள். கடந்த இரண்டு மாதமாக யாரும் தன்னைப் பார்க்க வரவில்லை அதை நினைத்து வந்த அழுகையை அடக்க மொட்டை மாடிக்கு வந்து கடலை வேடிக்கை பார்ப்பது வழக்கம். கடலை பார்த்தால் மனம் இலகுவாகிவிடும். அப்படித்தான் அவனுக்குக் கடல் பிடிக்க ஆரம்பித்தது. அவ்வளவு தண்ணிய பார்க்கும்போது இவன் கண்ணுல வர தண்ணீர் காணாம போயிடும். அதைத்தான் இன்றைய கவிஞன் கண்ணுக்குள்ள கடல் கசிவதை பாருன்னு எழுதியதைக் கேட்கும் போதெல்லாம் தோணும்.

கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டே தன் கால் சட்டையிலிருந்து அந்த வெளிறிய நீல நிற இன்லேண்ட் லெட்டர் ஐ எடுத்துப் படிக்க ஆரம்பித்திருந்தான். அதில் உள்ள ஒவ்வொரு வரியும் அவனுக்கு மனப்பாடம். வீட்டு நினைப்பு வரும்போதும் தனியாக இருக்கும்போதும் கடைசியா வந்த கடிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிப்பான்.

போனமாதம் அப்பா அவனுக்கு எழுதிய அந்த கடிதத்தில் வழக்கம் போல வீட்டின் கஷ்டம், ஏன் படிக்கனும் , 7 பேர் உள்ள வீட்டல எவ்வளவு செலவாகுது, அம்மா இறந்தபிறகு உதவிக்கு யாரும் வராததால் வீட்டு வேலை செய்யப் பெரிய அக்காவை பள்ளி ல இருந்து நிப்பாட்டினது, என்று மனதைக் கனக்கும் கடிதம் அதன் இறுதி இரண்டு பத்திகளில், ஆபிரகாம் லிங்கன் தன் பிள்ளையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம், , ஊதாரி மைந்தன் கதை, பிற பைபிள் கதைகள், காந்தி, நேரு, திருக்குறள் என்று முடியும். இந்த கடிதம் நேரு தன் மகள் பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதம் பற்றி எழுதியிருந்தார் அப்பா.

“நேரு அப்போது தன் மகளுக்கு அருகில் இருக்க முடியாத சூழல். ஒரு தந்தையாக.. தன் மகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்ற வருத்தம் நேருவுக்குள்ளும் இருதிருக்குமாயிருக்கும். அந்த தவிப்பைப் போக்கிக் கொள்ளவே மகளுக்குக் கடிதம் எழுதினார்

மகளே, நானும், நீயும் சேர்ந்திருக்கும் போது, நீ என்னருகில் அமர்ந்துகொண்டு என்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பாய், நானும் அவை அனைத்திற்கும் பதில் சொல்ல முயற்சித்துக் கொண்டிருப்பேன். ஆனால், இப்போது நீ முசெளரியில் இருக்கிறாய். நானோ அலகாபாத்தில்… இப்போது நம்மால் அருகமர்ந்து பேசிக்கொள்ள முடியாது. அதனால் தான் நான் உனக்கு அடிக்கடி கடிதம் எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.”

“இப்படி நேரு இந்த பூமிக்குக் கீழே உள்ள அத்தனை விஷயங்களைப் பற்றியும் வரலாற்றுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் கடிதங்களாக தன் மகள் இந்திராவுக்கு எழுதினார். இந்திராவும் அப்பாவுக்குக் கீழ்ப்படிதல் உள்ள பிள்ளையாக இருந்தார். அப்படி நான் எழுதும் இந்த கடிதங்களில் நமது பூமியின் கதை, இந்தப் பரந்த பூமியில் சிறியதும், பெரியதுமாகப் பரவி இருக்கும் எண்ணற்ற தேசங்களின் கதைகள், அந்த தேசங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்விதமாக வேறுபடுகின்றன போன்ற கதைகளை எல்லாம் இருக்காது. நம் குடும்பத்தின் கதை, இறைவன் எப்படி நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிறார், எப்படி நீ ஒழுக்கமாகவும் சிக்கனமாகவும் இருக்க வேண்டும். நீ உன்னை மட்டுமே நம்பி முன்னேற வேண்டும் அப்படி நீ படித்து முன்னேறினால் பல தேசங்களுக்கும் சென்று அதன் கதைகளை நீயே அறிந்து கொள்ளலாம். என்று தான் எழுத முடியும்.”

எத்தனாவது முறை அந்த கடிதத்தைப் படிக்கிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை. கடிதத்தின் சில சொற்கள் நீர் பட்டு அழிந்திருந்தது. அந்தவரிகள் அவனுக்கு அத்துப்படி. படித்து விட்டு கண்ணைத் துடைத்து விட்டு கடலை பார்த்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக ஹாஸ்டல் பெல் அடிக்க, அந்த பெல்லுக்கு முதல் தளத்தில் கொடிக்கம்பத்திற்கு முன் எல்லா மாணவர்களும் கூடவேண்டும். பள்ளியின் கொடி அரைக்கம்பத்தில் இருந்தது. திருவெற்றியூரில் ஒன்று முதல் ஐந்து வரையான டான்போஸ்க்கோ ஹாஸ்டலின் வார்டன் சிஸ்டர் ஐரீன் வழக்ததைவிட , உற்சாகமின்றி இருந்தார், மூன்றாவதாக நின்றிருந்த வளனைப் பார்த்து இந்த அறிவிப்பைப் படி என்று தாளை நீட்டினார்.

நமது பாரத பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னை இந்திராவின் ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் மூன்று நிமிடம் அமைதியாக ஜெபிப்போம்.

வளனின் கண்ணில் கடல் கசிந்து கொண்டிருந்தது.

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑