பகிர்

பில் கேட்ஸ் பரிந்துரைத்த புத்தகங்ககளில் ஒன்றான “உலகம் உண்மையில் எப்படி இயங்குகிறது” என்பது பற்றிய பத்தியைப் படித்துக் கொண்டிருந்த தேவகியின் கவனம் சிதையத் தொடங்கிய நேரத்தில் அலைபேசி ஒலித்தது.

அழைப்பிற்காகவே காத்திருந்தவள் போல ஆர்வமாக எடுத்து

 “வணக்கம் பிரதாபன் சார் எப்படி இருங்கீங்க?”

“உனக்கு குட் மார்னிங்  சொல்றதா இல்ல குட் ஈவினிங் சொல்லனுமா?”

“உங்களுக்கு நம்ம ஊர்ல குட் மார்னிங் னா எனக்கு கலிஃபோர்னியால குட் ஈவினிங் சார், எனக்கு இப்ப இரவு 8 மணி உங்களுக்குக் காலை 8.30.”

“ஓ சரி அடுத்த முறை நான் உனக்குச் சரியா மணி என்ன  காலையா மாலையா ன்னு சொல்றேன் பாரு”

கொரோனா கொஞ்சமாய் பூமியின் வடக்கு திசையில் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்த காலத்தில் தன் உறவினர் திருமணத்திற்கு இந்தியா சென்றவளுக்கு பல ஊர்களுக்குச் சென்றுவர அவள் தம்பி ஏற்பாடு செய்து தந்த ஓட்டுநர் தான் பிரதாபன்.

மார்ச் மாதத்தில் ஏற்பட்ட பரிச்சியம், பிரதாபனுக்கும் தேவகிக்கும் உரையாடலாய் வளர்ந்து அமெரிக்கா வரை வாட்ஸப் அழைப்பாய் காரணம் தேவகியின் வேடிக்கை பார்க்கும் குணமும் மனிதர்களை உற்று நோக்கி அவர்களின் உன்னதங்களை, கீழ்மைகளைத் தோண்டி எடுக்கும் பாதாளக் கரண்டி போன்ற சுபாவமும்தான்.

அவள் திரும்பி அமெரிக்கா வந்த அடுத்த நாளிலிருந்து ஊரடங்கு ஆரம்பித்தது. அது முதல் பிரதாபனிடம் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வாட்சப்பிலோ ஜூம் மூலமாகவோ பேசுவது முக கவசம் போல் பழக்கமாகிவிட்டது.

அன்று பக்கத்தில் உள்ள அமராவதிக்குச் சென்று வரக் காரை ஓட்டுவதற்கு வந்த பிரதாபன் சார் பற்றி ஏற்கனவே தேவகியின் தம்பி “உனக்கு நல்லா பொழுது போகிற மாதிரியான ஒருத்தரதான் ஏற்பாடு செஞ்சியிருக்கேன், அவர் போன் நம்பரையும் உனக்கு அனுப்பியிருக்கேன்” என்று தொலைபேசியிருந்தான்.

 காரில் ஏறி அமர்ந்ததும்

 வணக்கம் மேடம், அமராவதி போறதுக்கு 1 மணி நேரம் ஆகும், பாட்டு கேக்குறீங்களா? புத்தகம் படிக்கிறீங்களா இல்ல அமெரிக்கால இருந்து வந்து நம்ம ஊரைப் பத்தி நீங்கக் குறை சொல்றதை நான் கேட்டுட்டு வரவும் தயார்.”

“இல்ல எதுவும் வேணா நான் அமைதியா வண்டி ஓட்டனும் நீங்க உங்க போன்ல மூழ்கிடுவீங்கன்னா நான் வண்டி ஓட்றது கஷ்டம். என்ன சொல்றீங்க?”

இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்க்காத தேவகி இவர் வழக்கமான ஓட்டுநர் இல்லை என்று புரிந்துகொண்டு சிறிய புன்னகையுடன் “மேடம் எல்லாம் வேணாம்ங்க, தேவகினு பேர் சொல்லி அழைக்கலாம்” என்று பாந்தமா சொன்ன பதிலில் பிரதாபனுக்கு தேவகியின் மேல் சிறிய நல்லெண்ணம் துளிர்த்தது.

இப்டி கேள்வி கேட்டதால நான் கொஞ்சம் முரட்டு ஆளுன்னு நெனச்சிடாதீங்க, பிரயாணமும் சாப்பாடும்  மத்தவங்களோட பகிர்ந்துக்கிட்டாதான் சுவைக்கும் அதனாலதான்.

தம்பி சொன்னது சரி, அமராவதியை பார்ப்பதை விடவும் இந்த பயணம் இனியதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கை  கூடியதில் ஒரு அமைதி முகத்தில் தானாக தவழ ஆரம்பித்து அது பிரதாபனிடம் தொற்ற ஆயத்தமானது.

இந்த மனிதனிடம் தருவதற்கு நெறய இருக்கிறது திறக்கப்படாத வாட்ஸப் மெஸ்ஸேஜ்ஸ்  போல என்று புரிந்துகொண்ட தேவகி

“நாம பொறக்கறதே பகிர்ந்துக்கத்தானே சார்,” என்று முதல் கல்லை எறிந்தாள்.

அதைத்தான் கார்ல் மார்க்ஸ் சொன்னாரு,  ஆனா இன்னைக்கு மதத்தால நடக்குற சண்டைய பார்க்கும்போது அதுல மட்டும் காந்தியும் கார்ல் மார்க்ஸ் ஒரே மாதிரி எப்படி சொன்னாங்கனு புரியல. மதம் மக்களுக்கு அபின் என்கிறார் மார்க்ஸ் , மதம் துன்பப்படும் மக்களுக்கு தேவையான போதை என்றார் காந்தி.

அவுங்க சொன்னது இருக்கட்டும் நீங்க என்ன சொல்றீங்க?

“பிரேயர் கடவுளை மாத்தாது ஆனா மனிதனை மாத்தும் அதக்கு ஒரு சட்டகம் தான் மதம்.”

“மனிதக் குலத்திற்குக் கற்பிக்கப்பட்ட பெரிய பொய்கள் கடவுளும், மதமும். நாம் கட்டிவைத்துள்ள அனைத்து மத ஆலையங்களிலும் நிச்சயம் கடவுள் இல்லை, இருக்க வாய்ப்புமில்லை.”

எப்படி சொல்றீங்க?

என்னமா, எல்லாருக்குள்ளும் கடவுள் இருக்குனு சொல்றவங்களே மதத்தின் பெயர்ல அவுங்க சொந்த மதத்தைச் சேர்த்தவனையே கொல்றாங்க. உன்னை நேசிக்கிற மாதிரி அடுத்தவனை நேசின்னு சொன்னா முத்தல்ல தன்னை நேசிக்கிறது எப்படினே தெரியல.

புதிதா ஒரு மனிதன் பிறக்கப் போவதில்லை, நாம் தான் நம் சிந்தனையிலிருந்து நம் கற்பிதங்களிலிருந்து வெளியே வந்து புதிதாகப் பிறக்க வேண்டும், இதெல்லாம் நான் சொல்லல ஓஷோ, ஜிகே சொல்றாங்க. 

நாம ஒரு நல்ல புத்தகத்தைத்தான் புரட்ட ஆரம்பித்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டாள் தேவகி.

சினிமாவில் காண்பிப்பது போலச் சாலையின் இரண்டு பக்கமும் நிழல் தரும் மரங்கள் இந்த சாலையில் மட்டும்தான் என்று சொல்ல பிரதாபன் வாயெடுத்த நொடியில் நுங்கையும் இளநியையும் பார்த்ததும் 

சார் இளநி சாப்பிடலாமா என்றாள்.

ஓ தாராளமா

உங்களுக்கு இளநியா நுங்கா?

இப்ப இளநி சாப்பிடுவோம்,  நுங்கை வாங்கிட்டு போயி திரும்பி வரும்போது சாப்பிடலாம்.

சார் நல்ல யோசனை

அண்ணே ரெண்டு இளநி

எனக்கு வழுக்கை வேணாம்பா வெறும் தண்ணி இருந்தா போதும்.

எனக்கு எப்படி இருந்தாலும் பரவாயில்ல

எவ்வளவு ஆச்சுங்க?

மொத்தம் 70 ரூவாமா இளநி 50, 12 நுங்கு 20 ரூவா, நீ பேரம் பேசாம வாங்குனதால ரெண்டு நுங்கு சேர்த்து போட்டிருக்கேன்.

தேவகி சொன்ன பணத்தை குடுத்துவிட்டு திரும்ப 

பிரதாபன் கார் கன்னாடியை துடைத்து விட்டு கையை துணியால துடைத்துக்கொண்டு ஏறி அமர்ந்தார்.

இந்தாங்க சார் என்று தன் கையிலிருந்த சானிடைசர் ஐ அவர் கையில் சிறிது ஊற்றி விட்டு தானும் துடைத்து கொண்டாள். பிரதாபன் உள்ளங்கைகளை பர பர என்று தேய்த்துவிட்டு காரை முடுக்கினார்.

அமெரிக்கால இருந்து வரவங்க ரெண்டு ரகம். கேட்ட காசை குடுத்துட்டு வாங்கிட்டு போறவங்க, இன்னோன்னு வெலைய கேட்டதும் ஐயையோ இவ்வளோ வெலையா, நாலு வருஷம் கழிச்சு நம்ம ஊருக்கு வரதால எல்லாம் வெலை எறிபோச்சு ன்னு பேரம் பேச ஆரம்பிப்பாங்க 

ஏன் சார் இங்க இருக்குறவங்களும் அப்படித்தானே 

இங்க இருக்குறவங்க பல ரகம் இருக்காங்க ன்னு சொல்லிட்டு சிரித்தார்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்மா இளநி காசை பணம் தரும்போது கடைசியா கழிச்சிட்டு குடுமா

அதை பாத்துக்கலாம் சார்.  அந்த இளநி கடை காரருக்கு பக்கத்துல ஒரு சின்ன பொண்ணு அழகா உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தா பாத்திங்களா?

வேற என்னமா பார்த்த?

எனக்கென்னவோ அவருக்கு பணத்தை எண்ண தெரியாதுன்னு நினைக்கிறேன்.

எப்படி சொல்ற?

அவர் பணத்தை வாங்கினதும் அந்த பொண்ணும் அவரும் பார்வையை பரிமாறிக்கிட்டாங்க அதுல காசு சரியாதான் இருக்குனு அந்த பொண்ணு சொன்ன மாதிரி எனக்கு தோணிச்சு.

பரவாயில்லமா சரியாதான் சொல்லியிருக்க, அது அவரோட பொண்ணுதான் 6 வது படிக்குது. அவருக்கு எழுதப் படிக்க தெரியாது, பொண்ணுதான் கணக்கு வழக்கு பாக்குது.

அப்படியா? நான் நினைச்சது சரியா? எனக்கு அடுத்தவங்களை வேடிக்கை பாக்கிறது ரொம்ப பிடிக்கும் சார்.

அது ஒரு நல்ல குணம்மா, சினிமால எங்க இயக்குனர் சொல்லிட்டே இருப்பார் உன்னை சுத்தி நடக்கறதை வேடிக்கை பாரு அதுல இருந்து மனிதர்களை படிக்கலாம் அதை உன் கதைகளில் சொல்லுன்னு.

அடுத்தவங்களை வேடிக்கை பாக்கறதை விட, நம்மளை நாமே வேடிக்கை பாக்கிறது இருக்கே அது ஒரு அலாதியான செய்கை மா, கொஞ்சம் தள்ளியிருந்து நாம செய்த அத்தனையையும் , அறிவாளி என்று நினைத்து செய்த கோமாளித்தனங்களை, கோபத்தை, நடத்தையை, இப்படி நம்மை நாமே வேடிக்கை பாக்கிறது நம்மை நல்லா சுத்திகரிக்கும்.

சார், நீங்க உண்மையிலே ஓட்டுநர் தானா? இல்லை ஓய்வு நேரத்தில் இப்படி ஓட்டுநர் ஆ போயிட்டிருக்கீங்களா?

வண்டி ஊரிலிருந்து வெளியேறி அமராவதி செல்லும் தார்ச் சாலையில் வேகம் பிடித்தது, 

நமக்கு எங்கம்மா ஓய்வு எல்லாம்?

காத்து உள்ள போறது எப்ப நிக்குதோ அன்னைக்குதான் ஓய்வு

சொல்லுங்க சார் எதோ சொல்ல வந்தீங்களே அதை சொல்லுங்க?

பிரதாபனும் நாம எதையோ சொல்ல வரோம் என்பதைக் கூர்ந்து நோக்கும் தேவகியின் ஆர்வத்தால் தூண்டப்பட்டு

அது 1980 களின் இறுதி 90 களின் தொடக்கம் மா

சினிமாவில் மிகப் பெரிய இயக்குநர் பிரம்மராஜனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆச்சு மொத மொதல்ல ஆயிரம் ரூவா அட்வான்ஸ் வாங்கினேன் ஒரு படத்துக்கு, அதை எடுத்துட்டு அவுட்டோர் ஷூட்டிங் போவதற்கு முன்னாடி ஜி ஹெச் ல ஜெனரல் வார்டில் இருந்த  அப்பாவைப் போய் பாக்குறேன்.

“என்னப்பா வேணும்?” அப்பாட்ட கேட்டேன் 

அவர் நல்லா சுவையா சாப்பிடுவார்

“டேய் எனக்கு புகாரியில இருந்து பிரியாணியும்,  ஒரு கதர் பனியனும் வாங்கி குடு, கச கசன்னு இருக்கு, காத்தில்ல ஒன்னும் இல்ல, என்னடா ஆஸ்பித்திரி இது?”

 அப்பவும் சமுதாயத்தை பார்த்துதான் திட்டுறார்.

“இவுங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு,”

மத்த நோயாளிகளைப் பார்த்து இவரு பாவம் பாக்கிறார்.

பாவம் பாக்குறார்னு பிரதாபன் சொல்லும்போது ஒரு நமட்டு சிரிப்போடு சொன்னார்.

சரின்னு போயிட்டு அதை வாங்கி கொடுத்ததுதான் நான் அவருக்கு சம்பாதித்துக் கொடுத்த …..

முழுசா சொல்லாமல் அந்த வேதனையைச் சிரிப்பில் மடை மாற்றினார் பிரதாபன்.

தேவகியும் அதே மாதிரியான சிரிப்பைப் பதிலாகத் தந்துவிட்டு அவரை பார்த்தாள்.

“நான் இந்த மாதிரி அவுட்டோர் போகணும்பா உனக்கு வேற உடம்பு சரியில்லையேபா”னேன்.

“டூட்டி பஸ்ட் , போ அதுதான் உன்னை காப்பாத்தும். அம்மாவை பாத்துக்கோ.”

அவருக்கு ஒருவேளை தெரிஞ்சிருந்ததோ என்னவோ தெரியல,

சொல்லும் போது பிரதாபனின் குரல் நெகிழ ஆரம்பித்திருந்தது அவரின் ஆள்காட்டி விரலை மூக்கில் வைத்துத் தேய்த்துக்கொண்டே சிறுது மௌனமானார்.

தேவகி கன்னாடியை கழற்றி துப்பட்டாவால் முகத்தை ஒற்றி எடுத்தாள்.

எங்கப்பா செல்வச் செழிப்பாகப் பிறந்து வளர்ந்தவர் காந்தியையும் பெரியாரையும் வழிகாட்டிகளாய் கொண்டவர்.

எப்படி இவுங்க ரெண்டு பேரையும் ஒருத்தர் ஒரே நேரத்துல      

பாலோ பண்ண முடியும்னு இப்ப இருக்குறவங்களுக்கு புரியாது அந்த மாதிரி நெறய பேர் இருந்தாங்க அப்போ.  

காந்தியவாதி, சுதந்திரப் போராட்ட தியாகி, எப்போதும் மக்களைப்பற்றியும் மக்களுக்காக வாரி வழங்கி ஏழ்மையை எளிமை என்று ஏற்று வாழ்ந்த காங்கரஸ்காரர்.

நான் அப்பாட்டையும் அம்மாட்டையும் சொல்லிட்டு அங்கிருந்து போன பிறகு சாயந்திரமா அங்க இருந்த ஒரு கம்போன்டர் அம்மாட்ட வந்து,

“உங்க வீட்டுக்காரு இறந்துடுவாருமா, இறந்துட்ட பிறகு நீ எடுத்துட்டு போறது உனக்குக் கஷ்டம், நீ வில்லேஜ் ல இருந்து வந்திருக்க, சார நான் பாக்குறேன் டீசண்டான ஆளா இருக்காரு, ஏன்னா டாக்டர்ஸ்கெல்லாம் நல்லா ஒத்துழைக்கிறாரு, பாத்துட்டே இருக்குறேன் நானு, அதனால நீ இப்பவே அவரை வீட்டுக்கு கூப்டுட்டு போயிடு.”

“நான் ஸ்டெரச்சர்ல வச்சு அனுப்புறேன், கீழ டாக்சி வண்டி நிக்குது, ரன்னிங் ல போக்கும்போதுகூட இறந்துட்டா சொல்லிடாத ஏன்னா அதிகமா வாடகை கேட்பான். உங்கிட்ட காசில்லை. ஆளா கூப்ட்டு போனா ஒரு காசு …….அதுவாயிட்டா வேற காசு கேட்பாங்க.”

தொண்டை கமறலைச் சரிசெய்துகொண்டே தொடர்ந்தார் பிரதாபன்.

நான் மிகப்பெரிய பணக்காரனாக பொறந்தேன் எங்கப்பா இறக்கும்போது மிகச்சாதாரண ஏழையாயிட்டேன். ஏன்னா எங்கப்பா வந்து கேட்டவங்களுக்கும் மக்களுக்கும் வாரி வழங்கி எல்லாத்தையும் விட்டுட்டார் அப்ப நமக்கது தெரியல.

கண்ணைத் துடைத்துக்கொண்டே, அப்ப….ம்ம்….அது அப்பிடியாச்சா …..கொஞ்சம் நினைவுகளை கூட்டிவர சில வினாடிகள் எடுத்துக்கொண்டு தொடர்ந்தார் பிரதாபன்.

அப்படி ஒருத்தன் சொன்னானா, சரின்னு கீழ இருந்த ஒரு டாக்ஸி ல ஏறிட்டு அம்மா கேக்குறாங்க

 …தோ இதான் எங்க அம்மா அப்பான்னு டாஸ்போர்டில் ஒட்டி இருந்த போட்டவை காட்டினார். அந்த போட்டோவை அமைதியாக பார்த்தாள் தேவகி.

கேக்குறாங்க அம்மா, “அப்பா எதாவது வேணுமாப்பா னு?” எங்க அப்பாவை  அப்பானுதான் கூப்டுவாங்க எங்க அம்மா

“ஏதாவது வேணுமாப்பா …?”

“புள்ளையோட ரூமை பார்த்துட்டு போலாம்”

“இல்ல அவன்தான் ஷூட்டிங் போயிட்டானே”

“சும்மா ரூமை பார்த்துட்டு போலாம்”னுஅப்பா சொல்லியிருக்கார் 

அதைச் சொல்ல மிகுந்த தடுமாற்றம் குரலில் அந்த ஏக்கம் கண்ணீராய் துளிர்த்து வெளியில் வந்ததைத் துடைத்துக் கொண்டு பேசினார் பிரதாபன்.

அங்க போனா எங்க அசோசியேட் டைரக்டர் இருந்திருக்கார்.

அம்மா, அப்பாட்ட “இங்க பாருங்க இங்கதாங்க தம்பி தங்கியிருக்குனு” சொல்லும்போது அஸோஸியேட் எட்டிப்பார்த்திருக்கார்.

“ம்ம் அவன் அவுட்டோர் போயிட்டானே னு” அவரு சாதாரணமா சொல்லியிருக்கார்.

எங்கம்மா  எதையும் வெளிகாட்டிகள

“சரிங்க வந்தா சொல்லுங்கன்னு” இவுங்க சொல்லிட்டு வந்துட்டாங்க.

ரன்னிங்ல மீனம்பாக்கம்… மீனம்பாக்கத்தை தாண்டும் போதே……அது  ….நடந்துடுச்சி.

கொஞ்ச நேரம் மௌனமா இருந்துட்டு தொடர்ந்தார் பிரதாபன்

அப்ப கம்போன்டர் சொன்னது எங்க அம்மாவுக்கு நியாபகம் வந்துடுச்சி.

அவுங்க வில்லேஜிலே இருந்து வந்தவங்க ஆயிரம் சினிமா பார்த்தாலும் தைரியம்தான் இருந்தாலும் கணவன் இறந்து மடியில கிடக்கும்போது. எப்படி இருந்திருக்கும் யோசிச்சு பாரு?

தேவகியின் அத்தனை கவனமும் பிரதாபனின் உரையாடலில் ஒன்றிப்போயிருந்தன.

அப்பாட்ட பேச்சு குடுத்திட்டே போறாங்க 210 கிலோமீட்டரும் அவரு எதோ உயிரோட இருக்கிறது மாதிரியும் இவுங்க கேள்வி கேக்கற மாதிரியும் அவுரு பதில் சொல்றமாதிரியும் கேள்வி பதில் நடந்துட்டே இருக்கு

டிரைவர் டீ கடையில நிறுத்துவான் இல்ல, 

“நீ போய் சாப்பிடுப்பா ஏங்க உங்களுக்கு வேணுமாங்க?

இல்லப்பா அவருக்கு வேணாமாம்பா நீ போய் சாப்பிடு”

இப்ப பார்த்திபன் படத்துல ஒத்த செருப்புல பார்த்ததெல்லாம் எங்க அம்மா அப்பவே நடிச்சிருக்கு.

அடிக்கடி அந்த கேள்வி பதில் உரையாடல் எப்படி இருந்திருக்கும்னு யோசித்து பாக்குறதுண்டு …நாம இலக்கியத்துல, புராணத்துல, வரலாற்றுல இப்படி எத்தனையோ உரையாடல்களை பார்த்திக்கோம், படிச்சிருக்கோம் தன் கணவரோட எத்தனையோ பயணம் போயிருப்பாங்க எங்க அம்மா, அப்ப அவர்களுக்குள் எப்படியெல்லாமோ உறையாடியிருப்பார்கள்.

 இப்ப தன் கணவரை மடியில் கிடத்தி கொண்டு அவருடன் நடந்த இந்த உரையாடலும் அந்த பயணமும் இருக்கே …..

டிரைவர் சாப்பிட நிறுத்தும் ஒவ்வொரு இடத்துலயும் அதே பதிலை சொல்லி வந்துட்டே இருந்த அம்மா  

மனலப்பாடி என்ற எங்க ஊர் போர்டு பார்த்ததும் அவ்வளவு நேரம் அடிக்கி வச்சிருந்ததை மீறி ஓ னு கத்தியிருக்காங்க.

 டிரைவர் “என்னமா ஆச்சுன்னு” திரும்பி பார்க்கவும் 

“இல்லப்பா மீனம்பாக்கத்துலயே ….போயிடுச்சிபா”

“ஏம்மா சொல்லல, நான்பாட்டுக்கு டீ சாபிட்றேன் புரோட்டா சாபிட்றேன் ஏன் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல நீ” னு டிரைவர் கேட்டிருக்கான். 

“இல்லப்பா ..இது .ம்ம் .. சொன்னா உயிரோட இருக்கிறவங்களுக்கு ஒரு கூலி உயிரில்லாதவங்களுக்கு ஒரு கூலின்னு சொன்னாங்க”

எந்த மடையன் சொன்னான்? டிரைவர் திருப்பி கேட்டுட்டு, காசே வாங்காம போயிட்ட்டார்

இல்ல இந்த மனித நேயம் எல்லாம் சாகலங்றதுக்காக சொல்றேன்.

உங்க அப்பா செய்த தான தர்மத்துக்கு அதுதான் பலன்னு நெனைக்கிறேன் சார், தேவகி சொல்ல 

ஆமாமா அது சரிதான்.

சினிமா முன்பு மாதிரி இல்ல அதுல இருந்து விலகினதும்

என்ன செய்யலாம்னு எல்லாரும் யோசனை சொன்னப்ப 

கார் ஓட்டலாம், பயணம் செய்யலாம், உரையாடலாம்னு நான் முடிவெடுத்ததுக்கு காரணம் எங்க அம்மா மடியில எங்க அப்பாவை கிடத்திட்டு செய்த அந்த பயணம், உரையாடல்.

என் அப்பா அம்மா ரெண்டுபேரும் எல்லாத்தையும் பகிர்ந்துக்கிட்டாங்க, கடைசியா அப்பாவோட மரணத்தையும் அம்மா பகிர்ந்துகிட்டாங்க. எங்க அம்மா தான் எங்களுக்கு பெரிய ஜீவா ஊற்றா இருந்தாங்க 

வாழ்க்கையே ஒரு பயணம் தான், அந்த பயணத்துல நாம சக மனிதர்களோடு நடத்துற உரையாடல் தான் நம்ம நினைவுல நிக்கும், நாம பகிர்ந்துக்குற விஷயங்கள் தான் மனசுல தங்கும் அதுலயும் அன்பை பகிர்ந்துக்கிட்டா அதைவிட வேற என்ன பெருசா செய்துட முடியும்?

பிரதாபன் சார் சொல்லி முடிக்கவும் கார் அமராவதி அணைக்கட்டு என்ற பலகையின் முன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அணைக்கட்டில் மதகு திறந்து தண்ணீர் பாய்ந்து வந்துகொண்டிருந்தது.

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑