சிப்பி

A picture containing water, outdoor, ocean, blue

Description automatically generated

“அப்பா, கோஸ்ட் இருக்கா, இல்லையா?”

கேட்டுக்கொண்டே வந்த வெண்பாவின் தோள் மேல் அழகாக அமர்ந்திருந்தது சிப்பி.

தன் ஒரே செல்ல மகள் வெண்பா ஆசையாய் கேட்டது செல்ல நாய் அல்லது பூனை. வெண்பாவின் அம்மா கோதைக்கு நாய் என்றால் பயம். பூனை வீட்டுக்கு வெளியில் இருக்க வேண்டிய பிராணி என்று நினைப்பவள். விலங்கு, பறவை எதுவானாலும் கூண்டில் அடைத்து வீட்டில் வைப்பதில் கோதைக்கு ஒப்புதல் இல்லை. இருந்தாலும் மகளுக்காக பறவை வளர்க்க ஒத்துக்கொண்டாள். செல்வன் மகளைச் சமாதான படுத்த காக்கடீல்  பறவையை நேரில் காட்டி சம்மதிக்க வைத்து வீட்டிற்கு வாங்கி வந்திருந்தான். வெண்பாவே அதற்குச் சிப்பி என்று பெயர்சூட்டி மூன்று மாதங்கள் ஆகின்றது.

“ஏம்மா இன்னைக்கு எதாவது கனவு கண்டியா?” வாட்சாப்பிலிரிந்து கண்ணை எடுக்காமல் கேட்டான் செல்வன்.

 “இல்லப்பா இந்த வீட்ல எல்லா அறையிலும் நல்லா சமத்தா இருக்கிற சிப்பி, நீங்க க்ரீன் ஸ்க்ரீன் போட்டு வைத்திருக்கிற அறையில் நுழைந்தால் மட்டும் பயத்தில் நிறையப் பட படன்னு இறக்கையை அடிக்கிறான்.”

 “அதுக்கும் கோஸ்ட்டுக்கும் என்ன தொடர்புமா?” இன்னும் செல்வனின் கையும் கண்ணும் அலைப்பேசியிலிருந்தன.

 “நாய், பூனை, பறவைக்கெல்லாம் கோஸ்ட் இருந்தால் தெரிஞ்சிடும்னு நீங்களும் அம்மாவும் சிகாகோ பெரியப்பாவுடன் பேசிட்டிருந்ததை கேட்டிருக்கிறேன்”. சொல்லிக்கொண்டே வந்து சிப்பியைச் செல்வனின் தோளில் இடம் மாற்றினாள் வெண்பா.

வெண்பா சின்ன வயதிலிருந்து ஒரு முறை எதையாவது காதில் கேட்டால் கோவைப்பழச்செடியை வைத்து கரும்பலகையை அழித்தாலும் அழியாத சொற்கள் போல ஞாபகத்தில் பதித்துக்கொள்வாள். அதனாலே கோதையும் செல்வனும் வெண்பாவிற்கு முன்னால் பல விஷயங்களைப் பேசுவதில்லை.

சிப்பி செல்வனின் கழுத்திலிருந்த சங்கிலியை தன் சின்னஞ்சிறிய அலகால் கொத்திக் கொண்டிருந்தது.

சிப்பி, காக்கடீல் பறவை, மிகவும் பிரபலமான மெல்லிய ஆஸ்திரேலிய கிளி, குட்டியாகவும் தைரியமாகவும் இருக்கும். அதன் இறக்கைகளின் சிலிர்ப்புகள் மற்றும் சீட்டிகளின் சத்தம் நம் DNAவில் உள்ள ஆதி மனிதனைத் தட்டி எழுப்பும். பெண் காக்கடீல்ஐ விட ஆண் காக்டீல் பல விதமாக விசில் சத்தம் எழுப்பும். சிப்பியின் விசில் சத்தம் காலையில் மங்கள இசையாகிவிட்டது, வெண்பா பெரும்பாலும் சிப்பியின் இசை கேட்டுத்தான் எழுவாள். எப்போதும் வெண்பாவின் தோளிலோ அல்லது செல்வனின் தோளிலோ வாசம் செய்யும் சிப்பி. 

தம்பி தங்கை இல்லாத வெண்பாவிற்குச் சிப்பி தான் சகோதரன். சிப்பி வந்த நாளிலிருந்து அதன் கூண்டைச் சுத்தம் செய்வது, தண்ணீர், உணவு வைப்பது, அது எங்கு அசுத்தம் செய்தலும் உடனே துடைத்து விட்டுச்  சிப்பியிடமிருந்து சற்று தள்ளியே இருந்த கோதை இப்பொழுதுதான் நெருங்கிப் பழக ஆரம்பித்திருக்கிறாள்.

 “சரி அந்த அறையில் கோஸ்ட் இருக்கிறதால்தான் சிப்பி இறக்கையை வழக்கத்துக்கு அதிகமா  அடிக்கிறான்னு நினைக்கிறியா?”

வெண்பா தன் இடது  உள்ளங்கையை நீட்டச் சிப்பி தத்தி தத்தி தாவி உட்கார்ந்துகொண்டது, அதை வலது  கையால் பொத்தி இரண்டு விரல்களால் நீவி விட்டுக்கொண்டே செல்வனிடம் 

“இப்ப பாரேன் இந்த அறையில் எப்பிடி அமைதியா, மகிழ்ச்சியா இருக்கிறான், ஆனா அந்த அறைக்கு போனா மட்டும் பட படக்குறான்”

“அது கோஸ்ட் செய்ற வேலைன்னு சொல்றியா?”

“ அப்பா, நான்தான் கேள்வி கேட்டேன், நீங்கப் பதில் சொல்லாமல் என்னைத் திருப்பி கேக்குறீங்க?”

செல்வனிடம் இருந்து பதில் வராததால், “அப்பா நான் பேசிட்டு இருக்கேன் நீங்க கைபேசியையே பாத்துட்டு இருக்கீங்க? அம்……மா அப்பா வாட்சாப் பாத்திட்டு இருக்கார் “னு கூடத்திலிருந்த கோதைக்கு கேக்கற அளவுக்குக் கத்தி சொல்லிவிட்டு அப்பாவைப் பார்த்து மாட்டி விட்டுடேனே என்று முகத்தை ஆட்டி காட்டினாள்.

 வெண்பாவின் குரலுக்குக் கட்டுப்பட்டவனாகச் சற்றென்று வாட்சாப்பிலிருந்து விடுபட்டு, 

 “இல்லமா, கோஸ்ட்  இருக்கா, இல்லையா? இது  கடினமான கேள்வி, இருக்கு, இல்லனு உடனே பதில் சொல்ல முடியாதுமா.”

 “நீங்க நிறைய படிக்கிறீங்க, தினமும் பல ஜூம் கூட்டத்தில்ல கலந்துக்கிறீங்க, சின்ன வயசிலேயே பலருக்குக் கிடைக்காத உலக அனுபவங்களைக் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கார்னு சொல்லியிருக்கீங்க இதுக்கு பதில் சொல்ல முடியாதா? “

இந்த எதிர்க் கேள்வியை எதிர்பார்க்காத செல்வனுக்கு, நாம எப்பாவோ வாழ்க்கையை கத்துக்கொடுக்கணும் என்று நினைத்து தன் அனுபவங்களை மகளிடம் பகிர்ந்துகொண்ட போது  ஏதேதோ பெருமை பீற்றிக்கொண்டது இப்ப நமக்கே கேள்வியா வந்து நிக்குதுனு உரைத்தது.

“சரிம்மா, நான் பதில் சொல்ல முயல்கிறேன். ஆனால் உனக்கு புரியுமானு தெரியலயே.”

 “என் மூளைக்குப் புரிகிற மாதிரி சொல்லுங்க.”

“சரி. இங்க வா இப்படி உட்கார்” என்று வெண்பாவை தன் அருகில் அமரச்சொல்ல,  

“நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றேன் அதுக்கு முன்னாடி, நீ யாருக்கு செல்லம்?”  

“சிப்பித்தான் என் செல்லம்” என்ற மின்னல் வேகத்தில் பதில் சொன்னாள். 

வெண்பாவின் கன்னங்களை தன் இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு,  “எனக்கு சிப்பி நீ தான்மா” என்று செல்வன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிப்பி அவன் தோளிலிருந்து இறங்கி அப்பாவிற்கும் பொண்ணுக்கும் இடையில் வந்து, செல்வன் அணிந்திருந்த கால்சட்டை நாடாவைக் கடித்துக் கொண்டிருந்தது. 

A picture containing colorful, parrot, drawing, bird

Description automatically generated

வெண்பாவின் தலையை கோதிக்கொண்டே யோசித்தான்.  சின்ன வயசிலிருந்து வெண்பாவிடம் யாரவது அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என்று கேட்டால், இரண்டு பேருமே என்று தாமதிக்காமல் பதில் வரும்.  வளர வளர தன்னிடமே அதிகம் பிரியமும் ஒட்டுதலும் இருப்பதை நினைத்து ஒரு பக்கம் மகிழ்ந்தாலும், தாயில்லாமல் வளர்ந்த செல்வனுக்கு, கோதையும் வெண்பாவும் இன்னும் அதிக பிரியத்துடன் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சிந்தனை வயப்படுவான்.

தலையிலிருந்து கையை எடுத்து விட்டுக் கொண்டே “ப்பா …”  கண்களால் புருவத்தை உயர்த்தி என் கேள்விக்குப் பதில் இன்னும் வரல என்று சைகையில் கேட்டாள்.

“கோஸ்ட்க்கு உருவம் இல்லை, அதனால் நமக்கு அது இருக்கா இல்லையான்னு தெரியலை, கோஸ்ட் பத்தி ஏகப்பட்ட பேர் கதை சொல்லியிருக்கிறார்கள்.”

 “கடவுளுக்கு கூட உருவம் இல்லை ஆனா கடவுள் இருக்கார்ன்னு சொல்லியிருக்கீங்க,  கடவுளையும் யாரும் பார்த்ததில்லை அதேமாதிரி கோஸ்ட்ஐயும் யாரும் பார்த்ததில்லை, இருக்குன்னு நம்பலாம்.   அப்படித்தானேபா?”

“ஓ ஸ்மார்ட்டி பான்ட்ஸ் பேசுது?” என்ற செல்வனின் கிண்டலை கண்டுகொள்ளாமல் “பதில் சொல்லுங்கப்பா?” என்றால் வெண்பா.

கிரேக்க மெய்யியல் ஆசிரியர் பிளாட்டோ கோஸ்ட் இருக்குன்னு திடமா நம்பினார்.”

 “மெய்யியல் னா?” 

  “பிலாசபி மா”

   “ஓ …”

“பிளாட்டோ சொல்றாரு, அடிப்படையில் நாம் அனைவரும் அழிவில்லாத ஆன்மாக்கள், இந்த ஆன்மாக்களுக்குச் சொந்தமான இடம் என்பது உடலுக்கும் உலகத்துக்கும் அப்பாற்பட்ட கண்ணுக்குப் புலப்படாத உலகம் தான். அங்குதான் அவைகள் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உடல் மேலுள்ள பற்றாலும் உலகத்தின் இனபங்களாலும் ஈர்க்கப்பட்டு நிறைவேறாத ஆசைகளால் அதிலிருந்து விடுபட முடியாத உடலற்ற ஆன்மாக்கள் தான் கோஸ்ட். அவைகள் தங்களுக்குச் சொந்தமான கண்ணுக்குப் புலப்படாத இடத்திற்குத் திரும்பாமல் நாம் வாழும் உலகிலே தங்கி விடுகின்றன.”

“என்னப்பா கோஸ்ட் பத்தி சொல்ல சொன்னா, நீ பிளாட்டோ சொன்னார்னு எதையெதையோ சொல்லிட்டு இருக்க?”

எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம்  (மேல்நிலைப் பள்ளி) வகுப்பிற்குள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நுழைந்த வெண்பாவிற்கு இது எந்தளவு புரியுமென்று யோசித்து முடிக்கும் முன்பே  எதிர்க் கேள்வி வந்தது.

 “உடலற்ற ஆன்மா இருக்கில்ல அதுதான் கோஸ்ட்,  அது எதன் மீது அதிகம் பற்று வைக்கிறதோ அந்த பொருளின் மீது அதிகம் வெளிப்படும். நம் உடல் மீது பற்று அதிகம் இருந்தால் மனிதர்கள் மீது வெளிப்படும்.”

“கோகோ (coco) படத்தில் வருமே அதுமாதிரி சொல்றியா?”

 “கிட்டத் தட்ட அது மாதிரிதான் “

 “சரிப்பா, கோஸ்ட் நல்லதா? கெட்டதா?”

“செல்லக்குட்டி நம்மிடம் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கில்ல அது மாதிரிதான்”

“அப்படினா கடவுள் கிட்ட வெறும் நல்லது மட்டும் தான் இருக்கா? அதனால தான் கடவுளை வணங்குறோம் , கோஸ்டை வணங்குறதில்லையா?”

விடலை பருவத்துக்கே உரியத் தர்க்கத்தின் வெளிப்பாடாக வந்து  விழுந்த கேள்வியில் செல்வன் திக்குமுக்காடினான், அதே சமயம் அந்த கேள்வியின் லாஜிக்கை ரசித்தான்.

“அதாவதுமா, உலக மாயைகளிலிருந்து விட்டு விடுதலையாகி இருப்பது கடவுள் தன்மை.  உடலைச் சார்ந்த உணர்ச்சிகளுக்கும், உலக இன்பங்களுக்கும் அடிமையாகி விடுவது கோஸ்ட் தன்மை. ம்ம் இப்டி சொல்றேன் நம்மகிட்ட இருக்குற நல்ல குணங்கள் கடவுள் தன்மை, கெட்ட குணங்கள் எல்லாம் கோஸ்ட் தன்மை.”

“கடவுள் தன்மைனா, இந்தியன் கடவுளா? அமெரிக்கன் கடவுளா?” சிப்பியின் மூக்கில் முத்தமிட்டுக் கொஞ்சிக்கொண்டே கேட்டாள்.

அந்த கேள்வியில் அர்த்தமில்லாமல் இல்லை, காரணம் செல்வன் மதத்தால் கிருத்துவன், வெண்பாவின் அம்மா இந்து. இந்தியாவிலிருந்து கல்யாணம் முடித்த கையோடு கோதையுடன் அட்லாண்டாவில் குடியேறியதிலிருந்து வீட்டில் இரு கடவுளர்களின் படங்களும் இருக்கிறது. கோயிலுக்கும் தேவாலயத்துக்கும் செல்வதால் வெண்பா எப்போதும் இந்தியன் காட், அமெரிக்கன் காட் என்றே விளிப்பாள்.

“இப்ப உன்னிடமும் நல்ல குணம் இருக்கு என்னிடமும் நல்ல குணம் இருக்கு. அதேமாதிரி  எல்லா நல்ல குணங்களும் எல்லா கடவுளையும் குறிக்கும் செல்லம்.”

 “இரண்டு கடவுள் மட்டுமல்ல உலகில் இருக்குற எல்லா கடவுகளுக்கும் உள்ள தன்மை என்னென்னா அன்பு, நன்றி, கருணை, இரக்கம், பாசம்,”

“அப்ப  அதே போல கோஸ்டுக்கு இந்தியன் கோஸ்ட், அமெரிக்கன் கோஸ்ட் னு  பிரிவு இல்லை, எல்லா கோஸ்ட்டுக்கும் ஒரே தன்மைதான் இல்லையா?”

“அப்படியெல்லாம் பிரிவு இல்ல எல்லாம் ஒரே வகை தான். பேராசை, கோபம், களவு, பொய் இதெல்லாம் கோஸ்ட் தன்மை.”

“நீங்க சொல்ற கடவுள் தன்மை மாதிரியே எங்கள் தமிழ் பள்ளியில ஒரு திருக்குறள் சொன்னாங்க, அது வந்து ஏதோ தெய்வத்துள் வைக்கப்படும் ….அப்படி வரும்பா” சிப்பி வெண்பாவின் தலையில் வட்டம் போட்டுக்கொண்டிருந்தது.

வெண்பா வார இறுதியில் நடக்கும் தமிழ்ப் பள்ளியில் இறுதி ஆண்டு முடித்து ஒரு வருடம் தான் ஆகிறது. மகள்  பிறப்பதற்கு முன்பு, பெண் குழந்தை என்று மருத்துவர் உறுதிப் படுத்தியதும், என்ன பெயர் வைக்கலாம் என்று செல்வனும், கோதையும் பேசியபோது இருவரும் மனம் ஒத்து எடுத்த ஒரே முடிவு வெண்பா என்ற பெயர் தான், அதுவும் சில நிமிடங்களில் முடிவு செய்தனர்.

“செல்லம் தமிழ்ப் பள்ளி செய்முறை பயிற்சிக்கு நீ எழுதினியே அந்த குறள் தானே, வையத்துள் வாழ்வாங்கு……. ஞாபகம் வருதா?” வெண்பா உதட்டைப் பிதுக்கினாள் 

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.” 

“அதே தான்பா, அப்பா அதென்ன மெய்யி… பிலாசபி, கடவுள், கோஸ்ட் இப்படி நிறைய தெரிந்து வச்சிருக்கியே இதெல்லாம் யாரு உனக்குச் சொல்லி கொடுத்தா?” 

“தாத்தா, பெரியப்பா, என் ஆசிரியர்கள், புத்தகங்கள் இப்படிப் பல  பேரு சொல்லிக்கொடுத்தது, தமிழல் இருக்குற மெய்யியல் இதைத்தான்மா சொல்லுது. அதாவது பிலாசபி”

 “மதியம் சாப்பிட்டத்திலிருந்து அப்பாவும் மகளும் கத அடிக்கிறீங்க, எப்ப பாரு பேய், பாம்பு, சிங்கம், புலி, காடு இப்படி பயப்படர மாதிரியே பேசுங்க, கெளம்புங்க அனுஷா பிறந்தநாள் பார்ட்டி க்கு ரொம்ப தாமதமா போக முடியாது”. இரண்டு பேரையும் கிளப்பி விட்டாள் கோதை.

 “வெண்பா சீக்கிரம் குளிச்சிட்டு சிப்பியைச் சின்ன பயண கூண்டுல போட்டுக் கிளம்பு, அப்புறம் உன்னால தான் தாமதமா ஆயிடுச்சினு உன் தோழி அனுஷாட்ட சொல்லிவிடுவேன்.”

“சரிம்மா நான் கிளம்புறேன்,”என்ற வெண்பா “அப்பா இந்தாங்க சிப்பியை பிடிங்க”னு சொல்லிவிட்டு தன் அறைக்கு ஓடினாள். சிப்பி செல்வனின் சட்டை காலரைக் கொத்த ஆரம்பித்தது.

A bird in a person's hands

Description automatically generated with medium confidence

அனுஷாவிற்கு இது 14வது பிறந்த நாள். அனுஷாவும் வெண்பாவும் முதல் வகுப்பு முதல் ஒன்றாக அதே மாவட்ட பள்ளியில்(school district) படித்து வருகின்றனர். அனுஷாவின் அப்பா, அம்மா  மலையாளிகள்.  செல்வனும் அனுஷாவின் அப்பாவும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிகின்றனர் அதன் மூலம் இரண்டு குடும்பங்களும் நெருக்கமாயின.

வழக்கம் போல என்ன உடை அணியறது என்பதில் கோதைக்கும் வெண்பாவிற்கும் வாத பிரதி வாதங்கள் முடிந்து அந்த வழக்கு செல்வனிடம் கொண்டு வரப்பட்டு ஆளும் கட்சிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வருவது போல, வெண்பாவின் பக்கமே செல்வன் தீர்ப்பு வழங்கியதில் எதிர்த் தரப்பிடமிருந்த கடும் நெருக்கடியைச் சந்திக்கவேண்டி இருந்தது. பயணம் செய்யும் போது காரில் எடுத்து செல்வதற்க்காக வாங்கிய சிறிய கூண்டு போன்ற பையில் சிப்பியை அனுப்புவதற்கு ஏற்கனவே இணையத்தில் பார்த்திருந்த காணொளியில் சொன்னது போல முயன்று சிறிது போராட்டத்திற்குப் பிறகு வெற்றிபெற்ற மகிழ்ச்சியில்  காரில் ஏறிய வெண்பா  அமர்ந்ததும் “அப்பா சிப்பி பாட்டு போடுங்க” என்று கட்டளையிட்டாள். இப்பெல்லாம் சிப்பியைச் சுத்தியே எல்லாமே நடக்க வேண்டியிருக்கு என்ற எண்ணம் கோதையின் முகத்தில் வெளிப்பட்டது. காக்டீல் பறவைகளின் விசில் சத்தத்தை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து வைத்திருந்தாள் வெண்பா அதைத்தான் சிப்பி பாட்டு. காரில் செல்லும் பொழுது அனுஷாவின் செல்ல நாய்க்குட்டி பற்றியும், சிப்பியைப் பார்ப்பதற்கு அனுஷா எவ்வளவு ஆவலாய் இருக்கிறாள் என்பதை அனுஷாவின் வீட்டை நெருங்கும் வரை விவரித்துக் கொண்டு வந்தாள்.

பிறந்த நாள் பார்ட்டி அனுஷாவின் வீட்டில், நெருங்கிய சில நண்பர்களின் குடும்பம் மட்டும் வந்திருந்தன. அனுஷாவின் அப்பா கிட்டார் வாசிக்கச் செல்வன் பாட, அதன் பிறகு கரோக்கியில் ஒவ்வொருவராகப் பாட, கையில் மதுவும், காதுகளில் இசையும் நிரம்பி வழிந்தது. 

Sketch Walking Indian Family Hand Drawn Stock Vector (Royalty Free)  395171143

அனுஷாவிற்கு தன் பிறந்தநாளை விட  வெண்பா கொண்டு வந்திருந்த சிப்பியைத் தூக்குவதும் கொஞ்சுவதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அனுஷாவின் நாய்க் குட்டிமேல் எப்படி சிப்பியை உட்கார வைத்து காணொளி எடுப்பது, அதற்கு எப்படி பயிற்சி கொடுப்பது என்று தீவிர விவாதத்திலிருந்தனர் வெண்பாவும் அனுஷாவும்.

 மணி இரவு 11ஐ நெருங்கிக்கொண்டிருந்தது, கோதை “கிளம்பலாம் நீங்க அதிகம் குடிச்சிடீங்க, கார் நீங்க தான் ஓட்டனும், வீணா பிரச்சனை ஆயிடும் போதும்”என்று காதை கடித்து விட்டுப் போனாள். 

எல்லோரும் சென்றுவிடச் செல்வனும் அனுஷாவின் அப்பாவும் கையில் மதுவுடன் இளைய நிலாவைப் பொழிந்து கொண்டிருந்தனர். கோதை அனுஷாவின் அம்மாவிற்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்து உதவி செய்துகொண்டிருந்தாள்.

“அப்பா நான் இன்னைக்கு அனுஷா கூட ஸ்லீப் ஓவர் பண்ணவா” என்று கேட்க, “அம்மாட்ட கேளுமா “என்று சொல்லிவிட்டுப் பாடலில் மூழ்கினான். 

“இங்க பாரு வெண்பா அடுத்த வாரம் நீண்ட வார விடுமுறை வருது அப்ப இரண்டு பேரும் ஸ்லீப் ஓவர் பண்ணலாம், சிப்பி புது எடத்துல தூங்கமாட்டான், உன் அறையிலே தூங்கி பழகிட்டான, அவனுக்குப் பயமா இருக்கும்”னு கோதை சொன்னதும் வெண்பாவுக்கு அது சரி என்று பட்டது ஆனால் அனுஷாகூட ஸ்லீப் ஓவர் பண்ணவும் ஆசை.  சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தளர்வாக உடலையும் தோள் பட்டையையும் வைத்துக்கொண்டு நடந்தாள்.

 அனுஷா அப்பா, செல்வனிடம், “சரி கோதைக்கு இன்னும் கோவம் அதிகமாவதற்குள் நீங்க கிளம்புங்க” என்று சொல்லவும் கோதை செல்வனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “சரி மா நாம கிளம்பலாம்” என்று எழுந்தான் செல்வன். 

மூவரும் விடை பெற்றவுடன் காரை இயக்கினான் செல்வன்.

கார் சிறிது தூரம் சென்று நெடுஞ்சாலையைத் தொடுவதற்குள் கோதை படபடக்க ஆரம்பித்தாள்,

“எத்தனை முறை சொல்வது இரவு நேரமான பின்பு குடித்துவிட்டு வண்டி ஓட்ட வேணாம்னு. இனிமே எங்களை கூட்டிட்டு வரதா இருந்தா இப்படியெல்லாம் வந்தா நான் எங்கயும் வரமாட்டேன்.”

“சரி கொஞ்சம் அமைதியா வா நான் நிதானமாகத்தான் இருக்கேன்” என்றான் செல்வன்.       

“ஆமா உங்க நிதானம் எங்களுக்குத் தெரியாதா, குடிக்கிறவங்க யாரு தான் நான் போதையில இருக்கேன்னு ஒத்துக்குவாங்க.”

கோதையின் குரலிலிருந்த வெப்பம் செல்வனின் கோபத்தைக் கிளப்பி விட்டது. 

“அப்படினா நீ கார் ஓட்ட கத்துக்க வேண்டியதுதானே, அதை செஞ்சிருந்தா ஒரு பிரச்சினையும் இருக்காதில்ல” என்று குரலை உயர்த்தினான். அவ்வளவுதான், கோதையின் குரல் வெடிக்க ஆரம்பித்தது, 

“நீங்க குடிச்சிட்டு வண்டி ஓட்டாதீங்கன்னு சொன்னா நான் சரியில்லனு அதுக்கும் என்னைத்தான் குற்றம் சொல்லுவீங்களா? “என்று ஆரம்பித்து ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த கோபத்தையெல்லாம் வார்த்தைகளில் கொட்டினாள்.

 செல்வனின் கோபம் காலில் வெளிப்பட்டு காரின் வேகம் நெடுஞ்சாலையில் குறிப்பிடப் பட்டிருந்ததைவிட அதிவேகமாகச் செல்ல ஆரம்பித்தது,  இதை உணர்ந்த கோதை  “இப்படியே வேகமாய்  போய் எங்கேயாவது மோதுங்க அப்படியே எல்லாரும் போய் சேர்ந்தரலாம் “ என்று சொல்லி முடிப்பதற்குள் செல்வன் நிதானம் இழந்து ஆங்கிலத்தில் கத்த, பின் இருக்கையில்  சிறிய பயண கூண்டில் இருந்த சிப்பி படபடப்பதை ஆசுவாசப்படுத்த முயன்ற வெண்பா,         

“அப்பா தயவுசெய்து கத்தாதீர்கள், சிப்பி பயப்படறான், கார் உள்ளேயும் கோஸ்ட் வந்துடுச்சி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே 

அவர்களின் காருக்குப் பின்னால் காவல்துறை வண்டி சுழலும் சிகப்பு விளக்கை எரியவிட்டு, சைரனை அலறவிட்டது, அதை கார் கண்ணாடியில் பார்த்த செல்வன் பதட்டத்துடன் வேகத்தை வெகுவாக குறைத்து நெடுஞ்சாலையின் வலது ஓரமாய் காரை நிறுத்தினான். காவலர் இவர்கள் காரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வெண்பாவின் கண்களில் நீர் கோர்த்துத் திரண்டிருந்தது. 

இதுவரை வெண்பாவின் சிப்பிக்கு மட்டுமே புலப்பட்ட கோஸ்ட் தன்னோட சிப்பியின் கண்களுக்கும் தெரிவதை உணர்ந்த செல்வன் “அப்பாவை மன்னிச்சிக்கோ மா” என்று தன் கண்ணைத் துடைத்துக் கொண்டே திரும்பி வெண்பாவை பார்த்துச் சொன்னான். 

சிப்பி படபடப்பு குறைந்து அமைதியானது.

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑