http://www.charuonline.com/Feb09/Natunilamai.html
சாரு ,
ஒருவரின் விமர்சனம் அவருடைய ரசனை சார்ந்ததாகவே இருக்க முடியும். அந்த ரசனை அவரின் விருப்பம் சார்ந்ததாகவும் , அந்த விஷயம் குறித்து அவரின் ஆளுமையின் ஆழத்தின் அளவை பொறுத்தது எனவே இதில் நடு நிலமை , விருப்பு வெறுப்புகளற்றது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது என் கருத்து.
எப்படி கடவுளுக்குப் பல முகங்கள் உள்ளதாக கற்பிக்கப்பட்டும் அறியப்பட்டும் உள்ளதோ அதே போல் பாலாவின் ’ நான் கடவுள் ’ பற்றிய ஒவ்வொருவரின் விமர்சனத்திலும் அவரின் விருப்பம் சார்ந்த ஒரு கருத்து முகம் காட்டப்படுகின்றது. எனினும் உங்களின் ’ நான் கடவுள் ’ விமர்சனம் படிக்க ஆர்வமாக உள்ள பலரில் நானும் இருக்கிறேன் (இது என் விருப்பம் சார்ந்தது).
இந்தப் படத்தைப் பற்றி வலைப்பக்கத்தில் பலர் பேசுகிறார்கள். பேசுபவர்கள் அனைவரும் காசு கொடுத்துப் படம் பார்த்தால் கடவுளை கரை சேர்த்துவிடலாம்.
யாழினி சுந்தர்
பிப்ரவரி 19, 2009
***
இல்லை சுந்தர், உங்கள் கருத்தை நான் மறுக்கிறேன். நடுநிலைமை என்ற ஒன்று இருக்கிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் நாவலை நான் மிகக் கடுமையாக விமர்சித்து எழுதினேன். பிறகு, என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் பேசுமாறு ராமகிருஷ்ணனை அழைத்தேன். கூட்டத்தில் பேசிய ராமகிருஷ்ணன், நான் முன்பு உப பாண்டவத்தை விமர்சித்ததை மனதில் வைத்துக் கொண்டு என்னைப் பதிலுக்குத் திட்டவில்லை. அன்றைய விழாவில் மிக அருமையாகப் பேசியவர் அவர்தான். இதுதான் நடுநிலைமை என்பது. ஒருவர் நண்பர் என்பதற்காகப் பாராட்டுவது, அல்லது எதிரி என்பதற்காகத் திட்டுவது – இதுதான் அரசியலிலும், இலக்கியத்திலும், மற்றும் எல்லாத் துறைகளிலும் இன்றைய நடைமுறையாக உள்ளது.
சுஜாதா என்னுடைய நாவல்களை மலம் என்று திட்டினார். அது அவருடைய கருத்து. அந்தக் கருத்தைச் சொன்னதால் எனக்குள் ஏற்பட்ட கோபம் அவருடைய எழுத்தின் மீதான என்னுடைய மதிப்பீட்டைப் பாதிக்கலாகாது. அப்படி பாதித்தால் எனக்கென்று ஒரு அபிப்பிராயம் இல்லை என்றும், சுஜாதாவின் கருத்துதான் என்னுடைய அபிப்பிராயத்தையே நிர்ணயிக்கிறது என்றும் ஆகி விடுகிறது. அப்படியானால் என் மீது எனக்கே மரியாதை இல்லை என்று பொருள். சுயமரியாதை இல்லாதவர்கள் செய்யும் வேலை அது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் உத்தமத் தமிழ் எழுத்தாளர் என் நண்பர் அலெக்ஸிடம் என்னுடைய எழுத்தைப் பற்றிப் பாராட்டோ பாராட்டு என்று பாராட்டியிருக்கிறார். உடனே ரொம்பவும் உற்சாகமடைந்த அலெக்ஸ் எனக்கு போன் போட்டு அப்படியாக்கும், இப்படியாக்கும் என்றான். நான் உடனே “அவன் ஒரு அயோக்கியப் பயல்; அவன் பேசும் பேச்சுக்கு எந்த மரியாதையும் இல்லை; அவனுடைய பாராட்டைக் கொண்டு போய் குப்பைக் கூடையில் போடு ” என்றேன்.
அன்றைய தினம் மாலையில் ஒரு இலக்கியக் கூட்டம். நானும் உத்தமத் தமிழ் எழுத்தாளனும் மற்றும் பலரும் பேசுவாதாக இருந்தது. முதலில் நான் பேசினேன். (இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. யார் ஜூனியரோ அவர்தான் முதலில் பேச வேண்டும் என்பது ஒரு மரபு. உ.த.எ. வயதிலும், அனுபவத்திலும் என்னை விட பத்துப் பதினைந்து ஆண்டுகள் சிறியவர். ஆனால் கூட்டம் நடத்தியவர்கள் என்னுடைய தோற்றத்தை வைத்து உ.த.எ.வை விட நான் ரொம்ப ஜூனியர் என்று கணக்குப் போட்டு விட்டார்கள் போலும்.) மேடையில் பேசும் போது உ.த.எ.வின் சீடர் ஒருவரை வறுத்து எடுத்து விட்டேன் போலிருக்கிறது; கடைசியில் பேச வந்த உ.த.எ. “சாரு என்ன எழுதுகிறார்? மண்ணாங்கட்டி, தெருப்புழுதி ” என்ற பாணியில் வாய்க்கு வந்ததைத் திட்டினார்.
நான் அலெக்ஸைப் பார்த்தேன். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான்.
இன்னொரு சம்பவம். சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் எனக்குப் பிறகு பேச வந்த கமல்ஹாசன் “சாரு நிவேதிதா கூறியதுதான் என்னுடைய கருத்தும் ” என்று பேசி தனது உரையை ஆரம்பித்தார். இது சினேகபாவமான தொனி. இதை நான் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். இதன் பிறகு வெளிவந்த தசாவதாரத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டியிருக்க வேண்டும். இந்தியா டுடேவில் நான் எழுதிய கமல் பற்றிய கட்டுரையில் அவரை ஆஹா, ஓஹோ என்று நான் புகழ்ந்து தள்ளியிருக்க வேண்டும். செய்தேனா? தசாவதாரத்தைக் கடுமையாக விமர்சித்தேன். கமல் பற்றிய கட்டுரையில் நடுநிலைமையாக அவரைப் பற்றி ஆய்வு செய்தேன். அது கமல் பற்றிய சிறப்பு மலர். அந்த மலரில் எழுதப்பட்டிருந்த கமல் பற்றிய கட்டுரைகளிலேயே அவரை விமர்சித்து எழுதப் பட்ட ஒரே கட்டுரை அடியேனுடையதுதான். அடுத்த முறை பார்த்தால் என்னோடு பேசுவாரா, சொல்லுங்கள்?
இதற்குப் பெயர்தான் நடுநிலைமை என்பது.
ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் நட்போ, நல்லுறவோ அல்லது கோபமோ, வெறுப்போ அவருடைய படைப்பை நாம் அணுகுவதற்குத் தடையாக இருக்கலாகாது. அதுதான் நடுநிலைமை.
கனிமொழி என்னுடைய நண்பர். ஆனால் இப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை மனதில் கொண்டு ‘கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ’ என்று எழுதியிருக்கிறேன். இதனால் கனிமொழியின் மனம் புண்படும். நன்றாகத் தெரியும். ஆனால், நட்புக்காக பொய் சொல்ல முடியாது அல்லவா? அப்படியல்லாமல், நட்பு நம்முடைய விமர்சனத்துக்குக் குறுக்கே வந்தால் நீங்கள் நடுநிலை தவறுகிறீர்கள் என்று பொருள்.
உ.த. எ. ஒருமுறை சொன்னார், எதற்கு சினிமாக்காரர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று. இதனாலேயே அவருடைய சினிமா விமர்சனங்கள் முதுகு சொறிந்து விடுவது போல் ரொம்ப இதமாக இருக்கும். காரணம், எழுத்து அவருக்கு தவம் அல்ல; பிழைப்பு. (இதை மீறியும் சில சமயங்களில் அவர் நன்றாக எழுதி விடுகிறார்; எப்போது, எங்கே என்று பிறகு சொல்கிறேன்; பொறுங்கள்).
எனவே நீங்கள் சொல்வது போல் விமர்சனம் என்பது ஒருவரின் சொந்த விருப்பம் சார்ந்ததாக இருக்க முடியாது. எப்போது, எப்படி இருக்கலாம் என்றால் எனக்கு நாதஸ்வரம் பிடிக்காது; ஷெனாய் பிடிக்கும். எனக்கு அசோக மித்திரனைப் பிடிக்கவே பிடிக்காது; ஆனால் அவருடைய எழுத்து எனக்கு உயிர். ஆளையும் பிடிக்கும், எழுத்தையும் பிடிக்கும் என்றால் இந்தியாவில் குஷ்வந்த் சிங், தமிழில் நிறைய பேர் இருக்கிறார்கள்; பெரிய பட்டியலே போடலாம். ஆளையும் பிடிக்காது; அவர் எழுத்தையும் பிடிக்காது என்றால் உ.த.எ.
ஆனால் வேறோர் விஷயம் இருக்கிறது. ஷேக்ஸ்பியரின் எழுத்தில் இனவாதம் உள்ளது என்று ஒருவர் ஆய்வு செய்தார். அதுதான் ஒருவரின் ஆளுமை சார்ந்த விமர்சனம். இன்னொருவர் ஒரு ஆய்வு செய்தார். பாரதி ஒரு கோழை, ஆங்கிலேயனிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் என்று கட்டுரை எழுதியிருக்கிறார். பாரதியின் கடிதம் கூட அக்கட்டுரையில் உள்ளது. ஆனால் ” பாரதி கோழையாக இருந்தால் எனக்கென்ன? அவர் கவிதை படித்து எனக்கு வீரம் வருகிறதே, அது போதும் ” என்றேன் நான்.
இது தவிர வேறோர் வகையான விமர்சனம் உண்டு. ஸ்லம்டாக் மில்லியனரை உத்தமத் தமிழ் எழுத்தாளர் கடுமையாக விமர்சித்து எழுதியிருப்பதாக் அறிந்தேன். அதுதான் சரி. காரணம், அவர் ஒரு இந்துத்துவவாதி. அப்படிப்பட்டவர்களுக்கு அந்தப் படம் எரிச்சலையே தரும். இப்படிப்பட்ட கோட்பாட்டு ரீதியான விமர்சனங்கள் அல்ல என்னுடைய விமர்சனம். நான் ஒரு கனாய்ஸியர். இந்துத்துவத்தை முன்நிறுத்தும் படைப்பாக இருந்தாலும் அதில் ரசிக்கக் கூடிய அம்சங்கள் இருந்தால் அதையும் பாராட்டுவேன். விஷ்ணுபுரம் என்ற நாவல் இந்துத்துவத்தை முன்வைப்பதால் நான் திட்டவில்லை; அது படிப்பதற்கு சலிப்பூட்டுவதாக இருந்தது. அதனாலேயே திட்டினேன்.
20.2.2009.
பின்னூட்டமொன்றை இடுக