http://www.charuonline.com/aug08/seren.html
ஹலோ சாரு,
அமேஸான் மூலமாக ஸீரோ டிகிரி கிடைக்கிறது என்று நீங்கள் தெரிவித்ததுமே மூன்று பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். விடுமுறைக்கு ஊருக்குச் சென்று விட்டுத் திரும்பியதும் பார்சல் வந்திருந்தது. மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். ஏனென்றால் அந்த நாவலை நான் படிக்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. முதலில் என் சக அமெரிக்க நண்பர்கள் படிக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். இவர்களில் ஒரு பெண்ணும் உண்டு. அவர் என்னை என் பார்க்கிங்கிலிருந்து என் அலுவலகத்துக்குக் கொண்டு விடும் ஷட்டில் ட்ரைவர். ட்ரைவிங்கை விட அவர் அதிகம் செய்வது படிப்பதுதான். என்று நினைக்கிறேன்.
அந்தப் பெண்ணின் கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் இருக்கும். சில தினங்களில் ஒரே நாளில் இரண்டு புத்தகங்களைக் கூட படித்து விடுவார். அந்தப் பெண்ணோடு நான் பொதுவான விஷயங்களைப் பற்றி அவ்வப்போது அளவளாவுவது உண்டு. சென்ற மாதம் ஒருநாள் அவரிடம் என்னுடைய தேசத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளரின் நாவலைக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். அதனால்தான் உங்கள் நாவல் பிரதிகள் கிடைத்ததும் அவ்வளவு சந்தோஷம் அடைந்தேன். சொன்னபடி அவரிடம் உங்களுடைய ஸீரோ டிகிரியை படிக்கக் கொடுத்தேன்.
மறுநாள் அந்தப் பெண்ணைச் சந்திக்க நான் எவ்வளவு ஆர்வமாக இருந்தேன். என்பதை உங்களால் யூகிக்க முடியாது. நான் அந்தப் பெண்ணிடம் ஏற்கனவே கேட்டிருந்தேன், அந்த நாவலைப் பற்றி அவருடைய கருத்தை எனக்குச் சொல்ல வேண்டும் என்று. ஒரு சராசரி அமெரிக்கருக்கு உங்கள் நாவல் எப்படியிருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். என்பதே என் விருப்பம்.
இனிமேல்தான் இந்தச் சம்பவத்தின் சுவாரசியமான பகுதி துவங்குகிறது. புத்தகத்தைக் கொடுத்த கணத்திலிருந்தே அந்தப் பெண்ணின் கருத்து என்ன என்பதை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் துரதிர்ஷடவசமாக அடுத்த நாளிலிருந்து அவரைக் காணோம். ஒவ்வொரு முறை அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போதும் அந்தப் பெண்ணை என் கண்கள் தேடும். ஆனால் அவர் இருக்க மாட்டார்..இப்படியே ஒவ்வொரு நாளாகச் சென்று கொண்டிருந்தது. Serendipity என்ற ஆங்கிலப் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் கதாநாயகன் தன்னுடைய தோழியைத் தேடித் தேடிச் சலிப்பது போல் நானும் அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தேன்.
ஒரு நாளில் மூன்று தடவை நான் பார்க்கிங்கிலிருந்து அலுவலகம் செல்வேன். ஆனால் அந்தப் பெண்ணைக் காணவே இல்லை. ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணுக்குப் பதிலாக வேறு வேறு ஆட்கள் இருப்பார்கள்.
கடைசியாக ஒரு வாரம் கழித்து இன்றுதான் அந்தப் பெண்ணை என்னால் மீண்டும் சந்திக்க முடிந்தது. நிச்சயமாக எனக்குத் தெரியும் அவள் அந்த நாவலைப் பற்றிப் பேசுவாள் என்று. அதனால் நான் மௌனமாக இருந்தேன். அப்போது அவள் வாயைத் திறந்தாள்.
என்ன சொன்னாள் என்கிறீர்களா? நாளை சொல்கிறேன்.
யாழினி சுந்தர்
12.8.2008.
என்ன சொன்னாள் அந்த பெண் ? தெரிந்து கொள்ள ஆர்வம் யாழினி